லட்சங்களை மிச்சப்படுத்தும் கல்யாண செட் நகைகள்!

நன்றி குங்குமம் தோழி

இன்றைக்கு பல லட்சம் மதிப்புள்ள பாரம்பரியமான திருமண நகைகள் ரொம்ப ஈஸியா, கௌரவமா வாடகைக்கு கிடைக்க ஆரம்பிச்சிருக்கு. இதுவொரு மிகப்பெரிய கலாச்சார மாற்றம். கல்யாணம் என்பது இரண்டு மனம் சேருகிற விஷயம் மட்டுமில்லை, நமது அந்தஸ்தை சமுதாயத்தில் நிலைநிறுத்துகிற ஒரு நிகழ்வு. இதில் தங்கம் என்பது ஒரு பவர் சிம்பல். ஆம்! இன்றைக்கு தங்கம் விற்கிற விலைக்கு, யதார்த்தத்தில் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தால், ஒரு பெரிய ஆரமோ இல்லை ஒட்டியாணமோ வாங்குவது பெண்களால் நினைத்துப் பார்க்க முடியாத மிகப்பெரிய விஷயம்.

திருமணக் கூட்டத்தில் 20 சவரன் நகையினை அணிந்து உட்கார்ந்திருக்கின்ற ஒரு மணப் பெண்ணுக்கோ அல்லது பெண் வீட்டாருக்கோ, கல்யாணத்தை நிம்மதியாக ரசிக்கிற மனநிலை இருக்குமா? ஒவ்வொரு நிமிஷமும் நகை பத்திரமாக இருக்கா என்கிற பதட்டமே நீடிக்கும். இதற்கான தீர்வை தருபவர்களே சென்னையில் இயங்கி வருகிற விவாஹா பிரைடல் ஜுவல்லரி. இதன் இயக்குநர் ஜனனி தொடக்கத்தில், தன் வீட்டில் வைத்து தொடங்கிய சின்ன பிசினஸ், இன்று தி.நகர், அண்ணாநகர், வேளச்சேரி என பெரிய பெரிய ஷோரூம்களாக மாறி கிளை பரப்பியிருக்கிறது.

வாடகை நகை என்றாலே நம் மனங்களில் ஒரு சின்ன அபிப்ராயம் எப்போதும் இருக்கும். அதாவது, இது செட் ஒன். இது செட் 2. இது செட் 3 என, சில செட் நகைகளை பெட்டியில அடைத்து வைத்திருப்பார்கள். இதிலிருந்து ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள் என கண்டி ஷன் போடுவார்கள். வாடிக்கையாளருக்கும் வேற ஆப்ஷனே இருக்காது. இந்த சூழலை விவாஹா பிரைடல் ஜுவல்லரி உடைத்து, மார்க்கெட்டில் கிடைக்கும் ரெடிமேட் செட்டை அப்படியே கொடுக்காமல், கஸ்டமைசேஷனை உள்ளே கொண்டு வந்திருக்கிறார்கள்.

அதாவது, ஒரு மணப்பெண் உள்ளே வந்தால், அவருக்கு எந்த நெற்றிச்சுட்டி பிடிச்சிருக்கு? எந்த ஆரம் பிடிச்சிருக்கு எனத் தனித்தனியா செலக்ட் பண்ணி அவருக்கு ஏற்ற மாதிரி ஒரு கஸ்டமைஸ்டு செட்டை உருவாக்கிக் கொள்கிற சுதந்திரத்தை இவர்கள் முழுமையாகக் கொடுக்கிறார்கள்.ஒரு கல்யாணப் பெண் மைண்டில் இருந்து யோசித்துப் பார்த்தால், அவர் வாழ்க்கையில் இது மிகவும் முக்கியமான தருணம். அவருக்கான பிரத்யேக நாள். திருமணத்தில் மணமேடையில், தான் எப்படி தெரிய வேண்டும் என முடிவு செய்கிற அதிகாரம் அவரின் கைகளில். எனக்கு இந்த அட்டிகை வேணும். ஆனா, ஜிமிக்கி வேற மாடல்ல வேணும் என்றால், அதை அவர் தனது விருப்பத்திற்கு மாற்றி தேவையற்றதை நீக்கிவிட்டு, தேவையானதை தேர்ந்தெடுக்கிற சுதந்திரத்தை விவாஹா வழங்குகிறார்கள்..

பிரைடல் செட்டில், இவர்கள் கொடுப்பது சாதாரண கவரிங் நகைகள் கிடையாது. ஒரிஜினல் தங்க நகைகளை செய்கிற ஆச்சாரிகளை வைத்து, தங்க நகை மாடல்களை தத்துரூபமாக வெள்ளியில் அப்படியே வடிவமைக்கிறார்கள். அத்தனையும் 92.5 ஒரிஜினல் வெள்ளியில் தங்க முலாம் பூசப்பட்ட கோல்ட் பிளேட்டட் வெள்ளி நகைகள். ஒரு செட் நகையை உருவாக்கவே அவர்களுக்கு லட்சங்களுக்கு மேல் செலவு எடுப்பதாகவும் குறிப்பிடுகிறார்கள்.

டெம்பிள் ஜுவல்லரி, ஆன்டிக், குந்தன், செம்பு, நக்காஸ், போல்கி, அமெரிக்கன் டைமண்ட், சீசட் இப்படி எந்த மாடல் செட் நகைகளாக இருந்தாலும் ஒரிஜினல் தங்கம் போலவே எடை, டிசைன், பளபளப்பு என அத்தனையும் தத்ரூபமாக பார்க்க அச்சு அசல் தங்கம் போலவே மின்னுகிறது. அதே சமயம் குடும்பத்தாருக்கும், பொருளாதார ரீதியாக, பாதுகாப்பு ரீதியாக எந்த பயமும் இதில் இருக்காது.

லட்சங்களை கொட்டி 20 சவரன்ல ஒரே ஒரு பெரிய ஆரத்தை வாங்கி முடக்குவதற்குப் பதில், நீங்கள் போடுகிற நகைகளை மட்டும், இரண்டு அல்லது மூன்று சவரனில் சொந்தமாக வாங்கிக் கொள்ளுங்கள் என டிப்ஸ் கொடுப்பவர்கள், மெகந்தி, சங்கீத், முகூர்த்தம், ரிசப்ஷன்னு ஒவ்வொரு ஈவெண்டிற்கென அணிகின்ற, பெரிய பெரிய ஆபரணங்களை மாற்றி மாற்றி வாடகைக்கு எடுத்துக்கொள்ளுங்கள் என்பதே இவர்களின் ஸ்மார்ட் ஐடியாவாக இருக்கின்றது.

அதாவது, ஒரு பொருளை சொந்தமாக்குவதை விட அந்தப் பொருளால் கிடைக்கிற அனுபவத்துக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் இன்றைய இளம் தலைமுறையினர் என்பதை சரியாக பல்ஸ் பிடித்து வைத்திருக்கிறார்கள் இவர்கள். எனவே மணப்பெண்களுக்குத் தேவையான பிரீமியம் லுக்கினை, மிகக் குறைந்த செலவில், வாடகை நகைகளில் அனுபவித்து விடுகிறார்கள் இன்றைய நவீனப் பெண்கள்.

நான் சென்னையில் இருந்தால், கடைக்கு நேரில் சென்று தேவையானதை தேர்ந்தெடுத்து வாங்கலாம். ஆனால், மதுரை, கோவை அல்லது பெங்களூர், ஆந்திரா மாதிரியான வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருக்கின்ற மணப் பெண்கள், எப்படி தங்கள் கல்யாண நகைகளை ஆன்லைன் வழியாக தேர்ந்தெடுத்து, புக் செய்து வாங்க முடியும் என்ற நமது கேள்விக்கு? டெக்னாலஜியையும் தனிப்பட்ட அவர்களின் கவனிப்பையும் மிக்ஸ் செய்வதை குறிப்பிடுகிறார்கள்.

மணமகளுடன் இவர்கள் செய் கின்ற ஆன்லைன் வீடியோ அழைப்பில், கேமராவைத் திருப்பி ஆபரணங்களை மட்டுமே காட்டுவது நடக்காது. கூடுதலாக, பெண்ணின் முக அமைப்பு? அவரது ஸ்கின் டோன்? முகூர்த்தத்துக்கு கட்டப் போகிற பட்டுப்புடவையின் பார்டர் கலர்? பிளவுஸ் டிசைன்? பெண்ணின் தோற்றம் பருமனா? ஒல்லியா? உயரமா? குள்ளமா? என ஒவ்வொரு சின்னச் சின்ன டீட்டைலையும் நோட் செய்து சரியான ஆலோசனைகளை வழங்குகின்றார்கள். இந்த எக்ஸ்ட்ரா எஃபர்ட் தூரத்தில் இருக்கிற வெளிநாட்டு கஸ்டமர்களையும் அவர்களிடம் கொண்டு வந்து வாடிக்கையாளர்களாகச் சேர்க்கிறது.

ஏற்கனவே கல்யாண வீட்டில் எக்கச்சக்க டென்ஷன் இருக்கும். இதில் வாடகை நகையால் கூடுதல் பதற்றமும் இருக்கும். மணிக்கு இவ்வளவு வாடகை என்கிற ஒரு மீட்டர் ஒன்றும் நமது மைண்டில் ஓடிக்கொண்டே இருக்கும். மணப்பெண் கல்யாண ரிசப்ஷனில் நிற்கும்போதுகூட, டைம் ஆகுது சீக்கிரம் நகைகளை கழட்டி பத்திரமாகக் கொடுக்கணுமே என்கிற டென்ஷன் இருந்து கொண்டே தான் இருக்கும்.

இவற்றையெல்லாம் கணக்கிட்டு, இந்த ஹவர்லி மீட்டர் கான்செப்ட்டை தூக்கிவிட்டு, நகைகள் சேதமே ஆகாத ஜிப்லாக் பேக்கிங், ஸ்ட்ராங்கான ஜுவல்லரி பாக்ஸ் பேக்கிங் என கவனம் செலுத்தி, வீட்டு வாசலுக்கே டோர் டெலிவரியும் செய்துவிடுகிறார்கள். இதற்கு அவர்களுக்குத் தேவை ஒரு ஐடி ப்ரூஃப். அட்வான்ஸ் அவ்வளவுதான். கல்யாணம் முடிந்து எந்த அலட்டலும் இன்றி, வாடகை பணத்தை ஜிபே செய்துவிட்டு, மொபைல் ஆப் வழியாக நகைகளை ரிட்டர்ன் செய்கிற வசதியும் இவர்களிடம் இருக்கிறது. நகை பத்திரமாக கைகளுக்கு கிடைத்ததுமே, நாம் கொடுத்த முன்பணத்தை திருப்பி தந்துவிடுவார்கள்.

இவர்களின் இந்த சர்வீஸ் வெறும் மணப்பெண்ணுக்கான நகையோடு நிற்பதில்லை. ஒரு முழு கல்யாண நிகழ்வுக்குமான பேக்கேஜாகவும் தற்போது உருவெடுத்து இருக்கிறது. அதாவது, கல்யாணத்துக்கு தேவையான வெள்ளி சீர்வரிசை தட்டுகள், மேடையில் பிரமாண்டமாக வைக்கின்ற பெரிய பெரிய வெள்ளி குத்து விளக்குகள், பூஜை சாமான்கள், கல்யாண சடங்கில் மணமக்களை மோதிரம் தேட வைக்கின்ற வெள்ளிக்குடம் என அனைத்தும் வாடகைக்கு உண்டு. திருமணம் முடிந்து குழந்தை பிறந்ததுக்குப் பின் நிகழும், பெயர் வைக்கும் வைபவத்திற்குத் தேவைப்படும் வெள்ளி தொட்டிலும் வாடகைக்கு இவர்களிடத்தில் கிடைக்கிறது.

ஒரு பொண்ணோட கல்யாண கனவை பல லட்சம் செலவில்லாமல், அதே சமயம் எந்த சமரசமும் இல்லாமல் இந்த வாடகை நகை பிசினஸ் எப்படி நிஜமாக்குகிறதோ, அதேபோல், பல கோடிகள் செலவாகின்ற ஆடம்பர கல்யாண மண்டபங்கள், பல நாட்கள் நீடிக்கின்ற பிரமாண்ட சடங்குகள் என அத்தனையும் எதிர்காலத்தில் இதே மாதிரி மாற்றுப் பொருளாதார முறைக்கு மாறுமா?

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

Related Stories: