இந்திய உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி

நன்றி குங்குமம் தோழி

நான் முதல்வன்

டெல்லி உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் நீதியரசியாக பொறுப்பேற்றவர் லெய்லா சேத். பதவியேற்ற ஆண்டு 1978. பின்னர் 5.8.1991 அன்று இமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பை ஏற்றார். இந்தியாவில் இந்தப் பதவியை அலங்கரித்த முதல் பெண் இவரே ஆவார்.இந்தியாவின் 15 ஆவது சட்டக் குழு உறுப்பினராக இவர் செயல்பட்டிருக்கிறார். இந்து வாரிசுச் சட்டத் திருத்தத்தில் இவர் ஆற்றிய பங்கு முக்கியமானது. கூட்டுக் குடும்பங்களில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு என்பது அந்தச் சட்டத் திருத்தத்தின் சிறப்பம்சம் ஆகும்.

லெய்லா சேத் இன்னும் பல முக்கியமான விசாரணைக் கமிஷன்கள் மற்றும் கமிட்டிகளில் பங்காற்றியிருக்கிறார். அதில் நீதிபதி வெர்மா கமிட்டி மிக முக்கியமானது. 2012 ஆம் ஆண்டு, டெல்லியில் நடைபெற்ற கூட்டு வன்புணர்வு வழக்குக்குப் பிறகு இந்தியாவில் நிலவி வந்த கற்பழிப்பு தடுப்புச் சட்டங்களை மறுசீரமைப்பதை அந்தக் கமிட்டி நோக்கமாகக் கொண்டிருந்தது.
இவர் நிறைய புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். தமது சுய வரலாற்று நூலாக அவர் எழுதியிருக்கும், ‘On Balance’ குறிப்பிடத்தக்கது. ‘We, the Children of India’ என்ற புத்தகத்தில் இளைய தலைமுறை வாசகர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எளிதில் புரிந்துகொள்ளும் விதமாக விவரித்திருக்கிறார்.

சட்டத் துறையில் இருக்கும் பெண்களுக்கும், சட்டம் படிக்க விரும்பும் பெண்களுக்கும் லெய்லா சேத்தின் பாதை ஒளிவிளக்காகத் திகழ்கிறது.உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் பிறந்தவர் லெய்லா சேத். இவருடைய தந்தை ஆங்கிலேய ஆட்சியின் இம்பீரியல் ரயில்வே சர்வீஸ் பணியில் இருந்தார். தந்தை இறந்த பின்னர் தாயின் அரவணைப்பில் டார்ஜிலிங்கில் இருக்கும் லோரெடோ கான்வென்ட் பள்ளியில் படித்தார். பிறகு கல்கத்தாவில் ஸ்டெனோகிராஃபர் பணியில் சேர்ந்தார். அங்கே பிரேம் சேத் என்பவரைச் சந்தித்தார். இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணமும் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு தம்பதியினர் லண்டனுக்குக் குடிபெயர்ந்தனர். அங்கே பாட்டா காலணி நிறுவனத்தில் பிரேம் சேத் பணியமர்ந்தார்.

லெய்லா சேத் மேலும் படிக்க விரும்பிய போது அவர் குழந்தை ஒன்றுக்குத் தாயாகியிருந்தார். வக்கீலுக்குப் படித்தவர். 1958 ஆம் ஆண்டு, லண்டன் பார் எக்ஸாம் தேர்வில்
முதலிடம் பெற்ற முதல் பெண் இவரே! அப்போது அவருக்கு வயது 27.இவரது சாதனையை லண்டன் நாளிதழ் ஒன்று, ‘Mother-in-Law’ எனத் தலைப்புச் செய்தியுடன் வெளியிட்டிருந்தது. கையில் குழந்தையுடன் லெய்லா சேத் இருக்கும் புகைப்படமும் இடம்பெற்றது. பெண் ஒருவர் இந்தச் சிறப்பைப் பெற்றதை சில நாளிதழ்கள் விமர்சிக்கவும் செய்தன.

கணவரின் பணிமாறுதலை ஒட்டி, சேத் குடும்பம் இந்தியாவுக்கே மறுபடி திரும்பியது. பாட்னா உயர்நீதிமன்றத்தில் பத்தாண்டுகள் வழக்கறிஞராக லெய்லா பணியாற்றினார். இங்கே ஆணாதிக்கத்தின் பல இக்கட்டுகளை அவர் எதிர்கொள்ள நேரிட்டது. ஆரம்ப வருடங்களில் பெண் என்ற ஒரே காரணத்தால் பலரும் தங்கள் வழக்குகளில் வாதாட இவரை அணுகவில்லை. ‘வழக்கறிஞர்களின் பாலினத்துக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது.

அவர்களின் திறமைகளுக்கு அல்ல’ என்ற கசப்பான உண்மையை உணர்ந்தார். மணமுறிவு, குடும்ப விவகாரங்கள் போன்ற பெண்கள் தொடர்பான வழக்குகளை கையாளவே இவர் தகுதியானவர் எனப் பலரும் நினைத்தனர். ஆனால், ஆண் வழக்கறிஞர்களுக்கு இணையாக எல்லா வகையான வழக்குகளையும் கையாள, தான் தகுதியானவர் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை லெய்லா சேத்துக்கு இருந்தது.

கம்பெனிச் சட்ட வழக்குகள், உரிமையியல் வழக்குகள், குற்ற வழக்குகள், வருமான வரி மற்றும் அரசியலமைப்பு சார்ந்த வழக்குகள் எனப் பலவற்றிலும் திறம்பட வாதாடத் தொடங்கினார். ஒரு குறிப்பிட்ட வழக்கில் ரயில் எஞ்சின் டிரைவர் ஒருவருக்காக இவர் வாதாடினார். டிரைவர் ஓட்டி வந்த ரயிலின் பெட்டி ஒன்றின் மேல் ஒரு மனிதன் ஏறியிருக்கிறான். அவன் அப்படி ஏறி இருந்தது அந்த டிரைவருக்குத் தெரியாது.

ஒரு சுரங்கப் பாதையை ரயில் கடக்கும்போது அந்த மனிதன் இறந்துவிட்டான். அந்த டிரைவர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது. லெய்லா அவருக்காக வாதாடி, விடுதலை பெற்றுக் கொடுத்தார். வழக்காடியதற்குக் கட்டணம் கொடுக்க அந்த டிரைவரிடம் பணம் இல்லை. அவர் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ஒரு டின் நெய்யை கட்டணமாகக் கொடுத்திருக்கிறார்!

1972ல் டெல்லிக்குக் குடிபெயர்ந்த லெய்லா சேத் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பலவித வழக்குகளையும் மிகத் திறமையாகக் கையாண்டார். வெற்றிகரமான வழக்கறிஞர் எனப் பெயரெடுத்தார். உச்சநீதிமன்றத்திலும் வரி தொடர்பான வழக்குகள், மேல்முறையீட்டு வழக்குகள் பலவற்றிலும் ஆஜரானார். இவரை உச்ச நீதிமன்றம் மூத்த வழக்கறிஞராக அங்கீகரித்தது. இறுதியில் 1978ம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியானார். அப்போதும், ‘பெண் நீதிபதி’ என்ற பாகுபாட்டுக் கண்ணோட்டத்துடன் பலர் பார்ப்பது தொடர்ந்தே வந்திருக்கிறது. டெல்லி ஜிம்கானா கிளப் என்ற அமைப்பு, ‘ஆண் நீதிபதிகளை மட்டுமே உறுப்பினராக்குவோம், பெண் நீதிபதிகளுக்கு அந்த உரிமை இல்லை’
என இவரை நிராகரித்திருக்கிறது.

தடைகள் பலவற்றையும் தாண்டி, 1991ம் ஆண்டு இமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியானார் லெய்லா சேத். அங்கேயும் தங்களுக்கு மேல் பதவியில் இவர் இருப்பது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியிருக்கிறது. “எனக்கும் அது தெரியும், எப்படி அதைக் கையாள்வது என்பதும் தெரியும்” என்றார் லெய்லா.

தொகுப்பு: லதானந்த்

Related Stories: