முத்துக்கள் முப்பது-ஆலய தீர்த்தங்களின் அற்புதங்களும் மகிமைகளும்

1. முன்னுரை

ஆலய வழிபாட்டில் மூர்த்தி, தலம், தீர்த்தம்” என்ற வரிசையில், தீர்த்த வழிபாட்டிற்கு நம் மரபில் மிக முக்கிய இடமுண்டு. ஒரு ஆலயத்தின் ஆன்மிக ஆற்றல் என்பது அங்கிருக்கும் மூர்த்தியிடம் மட்டுமல்ல, அந்தத் தலத்தின் மண்ணிலும், அங்கிருக்கும் தீர்த்தத்திலும், தல விருட்சத்திலும் நிறைந்திருக்கிறது. கோயில் தீர்த்தங்களின் சிறப்புகளையும், அதன் பின்னால் இருக்கும் ஆன்மிகப் பின்னணியையும் நாம் கூர்ந்து நோக்கினால் சில சுவாரசியமான உண்மைகளைப் புரிந்து கொள்ளலாம். அதனால்தான், கோயில் தீர்த்தத்தை வெறும் தண்ணீராகப் பார்க்காமல், “ஆற்றல் மிக்க பிரசாதமாகக்” கருதி தலையில் தெளித்துக் கொள்கிறோம்; பருகுகிறோம். நீராடுகிறோம்.

2. ஒவ்வொரு தீர்த்தமும் ஒவ்வொரு சிறப்பு

ஒவ்வொரு தீர்த்தத்தின் பின்னாலும் ஒரு தெய்வீகக் கதை அல்லது வரலாற்றுப் பின்னணி இருக்கும். சிவபெருமான் தன் ஜடாமுடியிலிருந்து கங்கையை இறக்கியது போல், பல தலங்களில் இறைவனே தன் சூலத்தாலோ அல்லது அம்பாலோ நீர் நிலைகளை உருவாக்கிய கதைகள் உண்டு. (உதாரணமாக, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் பொற்றாமரைக் குளம்). முனிவர்களும் தேவர்களும் தங்களின் சாபம் நீங்கவும், பாவங்கள் தீரவும் குறிப்பிட்ட தலங்களுக்கு வந்து, அங்கிருக்கும் தீர்த்தத்தில் நீராடிப் பேறுபெற்ற கதைகள் புராணங்கள் எங்கும் நிறைந்துள்ளன. ஆலயங்களில் தீர்த்தங்கள் பல வடிவங்களில் அமைந்திருக்கும்:

* காவேரி, கங்கை போன்ற புண்ணிய நதிகள்
* புஷ்கரணி, தெப்பக்குளம் என்று அழைக்கப்படும் பிரம்மாண்ட வடிவங்கள்
* ஆலயக் கிணறுகள்:

“புறத்தூய்மை நீரால் அமையும் அகத் தூய்மை வாய்மையால் காணப்படும்” வள்ளுவர் வாக்குப்படி புறத்தை நீரால் தூய்மை செய்யலாம். ஆனால், கோயில் தீர்த்தம் என்பது அகத்தையும் புறத்தையும் ஒருசேரத் தூய்மை செய்யும் வல்லமை கொண்டது. தீர்த்த தரிசனமும், அதில் நீராடுவதும் நம்முடைய எதிர்மறை எண்ணங்களை நீக்கி, மனதிற்கு அமைதியையும் பணிவையும் தரும். புனிதமான சில தீர்த்தங்களைப் பற்றி இந்த இதழில் தெரிந்து கொள்வோம்.

3. சிவகங்கை

சைவத்தில் கோயில் என்றாலே சிதம் பரம். தீர்த்தம் என்றால் சிவகங்கை. சிவகங்கை குளத்தருகே தான் சின்னஞ் சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி சிவகாமி அன்னை சிரித்தபடி அருள்கிறாள். சிவகங்கை தீர்த்தம் ஆலயத்தின் உள்பிரகாரத்தில், ஞானசபைக்கு வடக்கே அமைந் துள்ளது. சிவகங்கை தீர்த்தத்தின் மகிமைக்கு மிகச்சிறந்த வரலாற்றுச் சான்றாகச் சொல்லப்படுவது கௌட தேசத்து மன்னனான சிம்மவர்மனின் கதை.

கடுமையான தொழுநோயால் பாதிக்கப் பட்டிருந்த இம்மன்னன், தில்லை வனம் வந்து இந்தத் தீர்த்தத்தில் நீராடினான். இந்தத் தீர்த்தத்தின் தெய்வீக ஆற்றலால் அவனது நோய் முற்றிலும் நீங்கியதோடு, அவனது உடல் தங்கமயமாக பிரகாசித்தது. இதனால் அவனுக்கு “இரண்யவர்மன்” (தங்க உடல் பெற்றவன்) என்ற பெயர் வந்தது. இதற்கு நன்றிக் கடனாகவே அவன் தில்லை நடராஜர் கோயிலைப் பெரிதாக விரிவாக்கம் செய்து, திருப்பணிகள் செய்தான் என்று தில்லை வாழ் அந்தணர் வரலாறுகளும், கோயிற் புராணமும் கூறுகின்றன.

4. கங்கையினும் தீர்த்தம் தில்லைச் சிவகங்கை

சிதம்பரம் என்பது பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாயத் தலம். ஆகாயம் என்பது எல்லையற்றது, தூய்மையானது. அதேபோல், இந்த சிவகங்கை தீர்த்தத்தின் நீர், மனிதர்களின் அகக்கண்ணை மறைக்கும் அறியாமை இருளை நீக்கி, ஞானத்தை வழங்கக் கூடியதாகக் கருதப்படுகிறது. சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தைக் காணும் ஆன்மாக்கள், அதற்கு முன்னதாகத் தங்களை ஆன்மிக ரீதியாகத் தூய்மைப்படுத்திக் கொள்ளும் இடமாக இந்தத் தீர்த்தம் விளங்குகிறது.

இக்குளம் மிகவும் ஆழமானது, நான்கு பக்கங்களிலும் அழகிய கல் படித்துறைகளைக் கொண்டது. மார்கழி மாத ஆருத்ரா தரிசனத்தின்போது சிவகங்கை தீர்த்தத்திற்குச் செய்யப்படும் பூஜைகளும், அதில் பக்தர்கள் நீராடுவதும் மிக விசேஷமானது. குளிர் நிறைந்த அந்த அதிகாலைப்பொழுதில், தில்லைக் கூத்தனின் அருள் அலைகள் இத்தீர்த்தத்தில் நிறைந்திருக்கும். “கங்கையினும் தீர்த்தம் தில்லைச் சிவகங்கை” என்று போற்றப்படும் அளவிற்கு, கங்கைக்கு நிகரான (அல்லது அதற்கும் மேலான) புனிதத்துவம் கொண்டதாக ஆன்மிகப் பெரியோர்களால் தில்லை சிவகங்கை தீர்த்தம் கொண்டாடப்படுகிறது.

5. கோனேரி தீர்த்தம்

திருமலையில் புனிதமான தீர்த்தங்கள் பல இருக்கின்றன. அதில் ஒன்று இதற்கு கோனேரி தீர்த்தம். வைகுண்டத்தில் இருந்து பகவானால் பூமிக்குக் கொண்டு வரப்பட்டதாகப் புராணங்கள் கூறும் இந்தத் தீர்த்தத்திற்கு அத்தனை மகத்துவம் உண்டு.

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்
தேனார் பூஞ்சோலைத் திருவேங்கட மலையின்
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே.”

– என்பது குலசேகர ஆழ்வார் பாசுரம்.

தேவலோகத்து அரம்பையர்கள் சூழ்ந்திருக்கும் இந்திர பதவியையோ அல்லது இந்த ஒட்டுமொத்த பூமியை ஆளும் பேரரசு பதவியையோகூட நான் விரும்பவில்லை. தேன் சிந்தும் மலர்ச் சோலைகள் நிறைந்த திருவேங்கட மலையில் உள்ள கோனேரி தீர்த்தத்தில் வாழும் ஒரு நாரையாக (குருகு) பிறக்கும் பாக்கியம் கிடைத்தால் அதுவே போதும்! என்ற குலசேர ஆழ்வாரின் பிரார்த்தனை இந்தத் தீர்த்தத்தின் பெருமையைச் சொல்லும்.

6. கோனேரி தீர்த்தமும் விரஜாநதியும்…

திருமலையில் புஷ்ப கைங்கரியம் செய்து கொண்டிருந்த அனந்தாழ்வான் (இராமானுஜரின் சீடர்), ஒருமுறை புஷ்பங்களைப் பறிக்கும் பொழுது பாம்பு தீண்டியது. ஆனால், அதைப்பற்றி கவலைப்படாமல் மாலையைக் கட்டிக்கொண்டு சந்நதிக்குச் சென்றார். அப்பொழுது திருவேங்கடப் பெருமான், அர்ச்சகர் மூலம் பேசினாராம். பாம்புக்கடிக்கு வைத்தியம் பார்க்காமல் இப்படி மாலை கட்டிக்கொண்டு வந்திருக்கிறீரே என்று கேட்க, அனந்தாழ்வான் பதில் சொன்னாராம்.

“கடித்த பாம்பு வலிமையாக இருந்திருந்தால், நான் வைகுண்டத்தில் விரஜையில் தீர்த்தமாடி, உன்னை அங்கு சேவிக்க வந்திருப்பேன். கடியுண்ட பாம்பு (தன்னைச் சொல்கிறார்) வலிமையானதால் கோனேரியில் தீர்த்தமாடி உன்னை இங்கு சேவிக்க வந்திருக்கிறேன்” என்றாராம். கோனேரி தீர்த்தம் விஷத்தை முறிக்கக் கூடியது என்பது ஒரு பொருள். இரண்டாவது பொருள் இது வைகுண்டத்தில் உள்ள விரஜா நதிக்குச் சமமானது என்று பொருள்.

7. ஆகாச கங்கை

திருமலையில் உள்ள மற்றொரு தீர்த்தம் ஆகாச கங்கை.ஸ்ரீ ராமானுஜரின் மாமாவும் ஆசாரியருமான பெரிய திருமலை நம்பிகள், ((ஸ்ரீ சைலபூர்ணர்) தினமும் திருமலையில் இருந்து பல மைல் தொலைவில் உள்ள ‘ஆகாச கங்கை’ தீர்த்தத்திற்கு நடந்து சென்று, குடத்தில் நீர் எடுத்து வந்து எம்பெருமானின் அபிஷேகத்திற்கும் ஆராதனைக்கும் சமர்ப்பிப்பதை தன் வாழ்நாள் கடமையாகக் கொண்டிருந்தார்.

திருமலை நம்பிகளுக்கு வயதாகி, உடல் தளர்ந்த ஒருநாள், அவர் வழக்கம்போல ஆகாச கங்கையிலிருந்து நீர் குடத்தைச் சுமந்து கொண்டு மலைப் பாதையில் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது எம்பெருமான்ஸ்ரீ நிவாசன் ஒரு வேடன் உருவத்தில் அவர் பின்னால் வந்து, “தாத்தா! எனக்கு மிகவும் தாகமாக இருக்கிறது, குடத்தில் இருக்கும் தண்ணீரைத் தாருங்கள்” என்று கேட்டார்.

8.பிதாமகர் (தாத்தா)உறவு தந்த தீர்த்தம்

அதற்கு நம்பிகள், “அப்பா, இது என் வேங்கடவனுக்கு அபிஷேகத்திற்காகக் கொண்டு போகும் புனிதமான தீர்த்தம். உனக்குத் தர முடியாது. உனக்குத் தாகம் எடுத்தால் குன்றின் மறுபக்கம் போய் தண்ணீர் குடித்துக்கொள்” என்று கூறிவிட்டு நடக்கத் தொடங்கினார். விடாத வேடன், நம்பிகளுக்குத் தெரியாமல் அவரது பின்னால் சென்று, தன் அம்பினால் அந்த நீர் குடத்தின் அடியில் ஒரு துளையிட்டான். குடத்திலிருந்து நீர் தாரையாகக் கொட்ட, அதைத் தன் வாயைத் திறந்து பருகினான்.

சிறிது தூரம் சென்ற பின் குடத்தின் பாரம் குறைந்ததை உணர்ந்த நம்பிகள், பின்னால் திரும்பிப் பார்த்தார். வேடன் தண்ணீரைக் குடிப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, “ஐயோ! பெருமாளின் தீர்த்தம் அசுத்தமாகிவிட்டதே!” என்று கண்ணீர் விட்டு அழுதார். அப்போது வேடன் மறைந்து, சங்கு சக்கரதாரியாக எம்பெருமான்ஸ்ரீ நிவாசன் பிரசன்னமானார். புன்னகையுடன், “தாத்தா! கவலைப்படாதீர்கள், உங்கள் குடத்துத் தண்ணீர் மிகவும் சுவையாக இருந்தது.

இனி நீங்கள் தண்ணீர் எடுக்க அவ்வளவு தூரம் போக வேண்டாம். இதோ இங்கேயே ஒரு தீர்த்தத்தை உருவாக்குகிறேன்” என்று கூறி, தன் அம்பால் பூமியைத் துளைத்து ஒரு தீர்த்தத்தை உண்டாக்கினார். அதுவே, இன்றளவும் “ஆகாச கங்கை” என்று அழைக்கப்படுகிறது. அன்று முதல் எம்பெருமானே இவரைத் தன் வாயால் “தாத்தா” (பிதாமஹர் / பாட்டனார்) என்று அழைத்ததால், வைணவ மரபில் பெரிய திருமலை நம்பிகளுக்குப் “பிதாமகர்” என்ற சிறப்புப் பெயர் உண்டாயிற்று.

9. திருவெண்காட்டிலுள்ள முக்குளங்கள்

பொதுவாக கோயிலுக்குள் ஒரு தீர்த்தம்தான் இருக்கும். ஆனால், திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர் திருத்தலத்தில் (புதன் தலம்) மூன்று தீர்த்தங்கள் உண்டு. இறைவன் சிவபெருமான் இங்கு மூன்று கண்களிலிருந்து சிந்திய ஆனந்தக் கண்ணீர்த் துளிகளே இந்த மூன்று தீர்த்தங்களாக மாறின என்று ஸ்தல புராணம் கூறுகிறது. 1. சூரிய தீர்த்தம் (சிவபெருமானின் வலது கண்ணிலிருந்து தோன்றியது) 2. சந்திர தீர்த்தம் (சிவபெருமானின் இடது கண்ணிலிருந்து தோன்றியது) 3. அக்னி தீர்த்தம் (சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியது) இந்த மூன்று குளங்களும் அம்மன் சந்நதிக்கு எதிரே, ஒன்றோடொன்று தொடர்புடையதாக, ஆனால், தனித்தனி குளங்களாக அமையப் பெற்றுள்ளன. இத்தலத்தில் உள்ள அஸ்திரதேவருக்கு இந்த முக்குளங்களில்தான் தீர்த்தவாரி நடைபெறுகிறது.

10. குழந்தை பாக்கியம்

இந்த முக்குளத்தின் சிறப்பைப் பற்றிப் பன்னிரு திருமுறைகளிலும், பிற இலக்கியங்களிலும் மிக உயர்வாகப் பேசப்பட்டுள்ளது. திருஞானசம்பந்தப் பெருமான் இந்தத் தலத்தைப் பற்றிப் பாடும்போது, இத்தலத்து மண்ணின் ஒவ்வொரு துகளும் சிவலிங்கம் என்றும், அதனால் காலால் மிதிக்க அஞ்சி, ஊருக்கு வெளியிலிருந்தே தவழ்ந்து வந்து முக்குளத்தில் நீராடி இறைவனை வழிபட்டார் என்றும் கூறுவர். குழந்தை வரம் இல்லாதவர்கள் இந்த மூன்று குளங்களிலும் வரிசையாக நீராடி, இங்கிருக்கும் வடவால விருட்சத்தை (ஆலமரம்) வணங்கினால் நிச்சயம் புத்திர பாக்கியம் கிட்டும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த முக்குளங்களில் நீராடி புதன் பகவானையும், அகோர மூர்த்தியையும் வழிபடுவதால் கல்வி, அறிவு, வியாபாரம் சிறக்கும்; பித்ரு தோஷங்கள் நீங்கும்.

பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடு உள்ளம் நினைவு
ஆயினவே வரம் பெறுவர் ஐயுற வேண்டா ஒன்றும்
வேயன தோளுமை பங்கன் வெண்காட்டு “முக்குள நீர்”
தோய் வினையார் அவர் தம்மைத் தோயாவாம் தீவினையே
– என்பது தேவாரம்.

11.ஸ்ரீ வில்லிபுத்தூரில் முக்குளம்

திருவெண்காட்டில் எப்படி முக்குளம் விசேஷமோ, அதைப்போலஸ்ரீ வில்லிபுத்தூரில் திருமுக்குளம் என்று உண்டு. காலநேமி என்ற கொடிய அரக்கனை எம்பெருமான் தனது திரு சக்கரத்தால் அழித்தார். சக்கரம் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ள எம்பெருமானிடம் வந்து நிற்க, எம்பெருமான் சங்கல்பத்தால், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும், தங்கள் தீர்த்தத்தை ஒன்றாக இந்தத் திருக்குளத்தில் சேர்த்ததால் இதற்கு முக்குளம் என்று பெயர். அதில் சக்கரத்தாழ்வார் தம்மை தூய்மைப்படுத்திக் கொண்டார். இறைவனையே தன் பாசுரங்களால் கட்டிப்போட்ட ஆண்டாள் நாச்சியாரின் திருமேனி பட்ட நீர் இது.

12. குளத்தில் தேடிய அனந்தாழ்வான்

ஸ்ரீ வில்லிபுத்தூர்ஸ்ரீ வடபத்ரசாயி (மற்றும் ஆண்டாள்) திருக்கோயிலுக்கு சற்றே வெளியே அமைந்துள்ள இந்தத் திருமுக்குளம், ஆண்டாள் நாச்சியார் மார்கழி நோன்பின்போது தன் தோழியருடன் அதிகாலையில் நீராடிய புனிதமான இடமாகக் கருதப்படுகிறது. ஒருமுறை அனந்தாழ்வான், இந்தத் தீர்த்தத்தில் வெகு நேரம் நீராடிக் கொண்டிருந்தாராம். மூழ்குவதும் எதையோ தேடுவதும் ஆயாசத்துடன் எழுவதுமாக இருந்தாராம்.

சீடர்கள் “குளத்துக்குள் என்ன தேடுகிறீர்கள்?” என்று கேட்டபொழுது, அவர் சொன்னாராம். “ஒரு காலத்தில் அன்னை ஆண்டாள் இந்தத் திருக்குளத்தில் தானே நீராடி இருப்பாள். அவள் பூசிய மஞ்சளின் ஒரு துளியாவது கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருக்கிறேன்” என்றாராம்.ஸ்ரீ வில்லிபுத்தூர் கோயிலுக்கு வெளியே உள்ளது. இந்த புனிதமான தீர்த்தம்.ஸ்ரீ வில்லிபுத்தூர் கோயிலுக்குள் கண்ணாடிக்கிணறு இருக்கிறது. மாலை சூடி ஆண்டாள் அழகு பார்த்த கிணறு.

13. திருநள்ளாறு நள தீர்த்தம்

காரைக்காலுக்கு அருகில் உள்ள திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் என்றாலே நம் நினைவுக்கு வருவது நவகிரகங்களில் சக்தி வாய்ந்தவராகக் கருதப்படும்ஸ்ரீ சனீஸ்வர பகவானும், அங்குள்ள புனிதமான நள தீர்த்தமும்தான். மகாபாரதத்தில் வரும் நிடத நாட்டு மன்னனான நள சக்கரவர்த்தி, சனியின் தாக்கத்தால் (ஏழரை சனி) தன் நாடு, செல்வம், மனைவி (தமயந்தி) என அனைத்தையும் இழந்து, உருவமும் மாறி பல இன்னல்களுக்கு ஆளானான்.

இறுதியில் பேரரசன் நளன், முனிவர்களின் அறிவுரைப்படி திருநள்ளாறு திருத்தலத்திற்கு வந்தான். அங்கிருந்த புனிதக் குளத்தில் நீராடி, தர்பாரண்யேஸ்வரரையும் சனீஸ்வரரையும் மனமுருகி வழிபடத் தொடங்கினான். நளன் அந்தத் தீர்த்தத்தில் மூழ்கி எழுந்த மாத்திரத்திலேயே, அவனைப் பிடித்திருந்த சனி தோஷம் (கலி புருஷன்) அவனை விட்டு நீங்கியது. இழந்த செல்வமும், நாடும், மனைவியும் அவனுக்கு மீண்டும் கிடைத்தன. நள மன்னனின் துயரத்தைத் தீர்த்ததால், அன்றிலிருந்து அந்தத் திருக்குளம் “நள தீர்த்தம்” என்று அழைக்கப்படலாயிற்று.

14. சனிதோஷம் நீக்கிய குளம்

இன்றளவும் சனிக்கிழமைகளிலும், குறிப்பாக ‘சனிப் பெயர்ச்சி’ நாட்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த நள தீர்த்தத்தில் நீராடுவதை முதன்மையாகக் கொள்கிறார்கள். இந்தத் தீர்த்தத்தில் நீராடினால் ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி போன்ற சனி தோஷங்களின் வீரியம் குறைந்து, வாழ்வில் நலம் பெருகும் என்பது நம்பிக்கை. குளத்தில் நீராடிய பின், தாங்கள் உடுத்தியிருந்த பழைய துணிகளை அங்கேயே விட்டுவிட்டு, புதிய ஆடைகளை உடுத்திக் கொள்வது இத்தலத்து மரபாக உள்ளது (நம் துயரங்களும், பாவங்களும் பழைய ஆடையோடு போய் விடுகிறது என்பது ஐதீகம்). நீராடி முடித்த பின், சனீஸ்வர பகவானின் வாகனமான காகத்திற்கு அன்னமிட்டு, அதன் பிறகே மூலவரை தரிசிக்கச் செல்வார்கள். திருநள்ளாறில் நள தீர்த்தம் தவிர, பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம் போன்ற பிற தீர்த்தங்களும் உள்ளன. எனினும், நள மன்னனின் வாழ்வை ஒளிரச் செய்த ‘நள தீர்த்தமே’ இத்தலத்தின் முகவரியாகத் திகழ்கிறது.

15. சந்திர புஷ்கரணி(பெருமாள் ஆலயங்களில்)

ஒரே பெயரில் பல தலங்களில் தீர்த்தங்கள் இருக்கும். உதாரணம் சந்திர புஷ்கரணி. சந்திர பகவான் தன் சாபங்கள் நீங்கவும், தன் ஒளியை மீண்டும் பெறவும் பல்வேறு தலங்களில் உள்ள தீர்த்தங்களில் நீராடி சிவ பெருமானையும், பெருமாளையும் வழிபட்டுள்ளார். இதனால் அந்தந்த தலங்களில் உள்ள குளங்களுக்கு ‘சந்திர புஷ்கரணி’ என்ற பெயர் ஏற்பட்டது. பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும்ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலில் உள்ள முதன்மைத் தீர்த்தம் சந்திர புஷ்கரணி ஆகும். சந்திரன் தன் மாமனாரான தட்சனின் சாபத்தால் தன் கலைகளை இழந்து தேய்ந்து போனபோது, இத்தலத்து சந்திர புஷ்கரணியில் நீராடி, ரங்கநாதரை வழிபட்டு தன் சாபம் நீங்கப் பெற்றான் என்பது புராணம். இக்குளத்தின் நடுவே ஒரு சிறிய மண்டபமும், அதன் கரையில் புனிதமான புன்னை மரமும் (ஸ்தல விருட்சம்) அமைந்துள்ளது.

16. கைரவிணி தீர்த்தம்

சென்னையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலமானஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோயிலுக்கு எதிரே அமைந்துள்ள பிரம்மாண்டமான திருக்குளத்தின் பெயரும் சந்திர புஷ்கரணி (அல்லது கைரவிணி தீர்த்தம்) ஆகும். அத்திரி மகரிஷியின் புத்திரனான சந்திரன், தன் குருவின் சாபம் நீங்குவதற்காக இந்தத் தீர்த்தத்தில் நீராடி அல்லி மலர்களைக் கொண்டு எம்பெருமானை வழிபட்டதாகக் கூறப்படுகிறது. திருஇந்தளூரிலும் சந்திர புஷ்கரணி உண்டு.பரிமள ரெங்கநாதருக்கு தெப்ப உற்சவம் நடைபெறும்.

17. காருண்ய அமிர்த தீர்த்தம்

கும்பகோணத்திற்கு அருகில் உள்ள, மகாலிங்கசுவாமி வீற்றிருக்கும் புகழ்பெற்ற சிவத்தலமான திருவிடைமருதூரிலும் காருண்ய அமிர்த தீர்த்தம் உள்ளது. மகாத்மியம்: பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்ட வரகுண பாண்டிய மன்னன், இத்தலத்து காருண்ய அமிர்த தீர்த்த புஷ்கரணியில் நீராடி, மகாலிங்கப் பெருமானை வழிபட்டு தன் தோஷம் நீங்கப் பெற்றான் என்ற வரலாறு இதற்குண்டு. ராமேஸ்வரம் கடற்கரை தீர்த்தம் ‘அக்னி தீர்த்தம்’ என்று உலகப் புகழ்பெற்றது. அதேபோல திருவண்ணாமலை, திருவெண்காடு ஆகிய தலங்களிலும் அக்னி தீர்த்தம் உள்ளது.
இனி பொற்றாமரை குளம் குறித்துப் பார்க்கலாம்.

18. மதுரை பொற்றாமரைக்குளம்

மதுரை என்றாலே நம் நினைவுக்கு வருவது அன்னை மீனாட்சியின் ஆலயமும், அங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பொற்றாமரைக் குளமும் தான். இந்திரன் தன் பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக இங்கு வந்தபோது, சிவபெருமானை வழிபட மலர்கள் தேடினான். அப்போது இந்தத் தீர்த்தத்தில் அவனுக்காக பொன்னிறத் தாமரை மலர்கள் பூத்து குலுங்கியதால், இதற்கு ‘பொற்றாமரைக்குளம்’ என்று பெயர் வந்தது. தமிழ் வரலாற்றோடு மிக நெருங்கிய தொடர்புடைய குளம் இது. சங்க காலப் புலவர்களின் பாடல்களின் தரத்தை ஆராய, சிவபெருமானால் வழங்கப்பட்ட ‘சங்கப் பலகை’ மிதந்தது இந்த பொற்றாமரைக்குளத்தில் தான். திருக்குறள் உள்ளிட்ட உன்னத நூல்களை இந்தத் தீர்த்தம் ஏற்றுக்கொண்டு, தமிழ் வளர்த்த பெருமை கொண்டது.

19. கும்பகோணம்ஸ்ரீ சாரங்கபாணி கோயில் – பொற்றாமரைக்குளம்

கும்பகோணத்தின் மையப்பகுதியில், புகழ்பெற்ற திவ்ய தேசமானஸ்ரீ சாரங்கபாணி (ஆராவமுதன்) திருக்கோயிலுக்கு மிக அருகில் இந்த பொற்றாமரைக்குளம் அமைந்துள்ளது. இது குடந்தையின் மிக முக்கிய புனித தீர்த்தமாகும். பிருகு மகரிஷியின் அவதாரமான ஹேமரிஷி என்பவர், லட்சுமி தேவியே தனக்கு மகளாகப் பிறக்க வேண்டும் என்று இந்த குளக்கரையில் அமர்ந்து கடும் தவம் புரிந்தார். அவரது தவத்திற்கு இரங்கி, அன்னை மகாலட்சுமி இக்குளத்தில் மலர்ந்திருந்த ஒரு பெரிய பொற்றாமரையில் (தங்கத் தாமரையில்) ஒரு சிறு குழந்தையாக அவதரித்தாள். ற்றாமரையில் உதித்ததால் அவளுக்கு “கோமளவல்லி” என்று பெயரிட்டு வளர்த்தார் மகரிஷி. பின்னர், வைகுண்டத்திலிருந்து சாரங்கபாணி பெருமாள் ரதத்தில் வந்து தாயாரைத் திருமணம் செய்து கொண்டார் என்பது ஸ்தல வரலாறு. மகாமகக் குளத்திற்கு இணையான புனிதத்துவம் வாய்ந்தது இந்த பொற்றாமரைக்குளம்.

20. வேறு எங்கு பொற்றாமரைக்குளம் உண்டு?

திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தின் உள்ளே, ஐந்தாம் பிரகாரத்தில் பிரம்மாண்டமான பொற்றாமரைக்குளம் அமைந்துள்ளது. கார்த்திகை தீபத் திருநாளின்போது இக்குளத்தின் கரையிலும் தீபங்கள் ஏற்றி வழிபடப்படும். தில்லை நடராஜர் ஆலயத்திற்கு வடக்கே, சிவகங்கைத் தீர்த்தத்திற்கு அருகில் சிவகாமியம்மன் சந்நதிக்கு எதிரே உள்ள குளத்தையும் சிலர் பொற்றாமரைக்குளம் என்று குறிப்பிடுவதுண்டு. பொன்னிறத் தாமரை” என்பது ஆன்மிக ரீதியாக ஞானத்தையும், இறைவியின் தூய அவதாரத்தையும் குறிப்பதாகும். அதனால்தான், இறை சக்தியும் இலக்கிய வளமும் நிறைந்த இந்த உன்னதத் தலங்களின் தீர்த்தங்களுக்குப் ‘பொற்றாமரைக்குளம்’ என்று நம் முன்னோர்கள் பெயரிட்டுள்ளனர்.

21. சரவணப் பொய்கை

“சரவணப் பொய்கை” (சரவண தீர்த்தம்) என்பது முருகப் பெருமானின் அவதாரத்தோடு நேரடியாகத் தொடர்புடைய, சைவ சமயத்தில் மிக உயரிய இடத்தைப் பெற்ற ஒரு புனித தீர்த்தப் பெயராகும். ‘சர’ என்றால் நாணல், ‘வணம்’ என்றால் காடு. நாணல் காடுகள் நிறைந்த பொய்கையில் (குளத்தில்) முருகன் அவதரித்ததால், அதற்குச் ‘சரவணப் பொய்கை’ என்று பெயர் வந்தது. புராணங்களின்படி, சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து வெளிப்பட்ட ஆறு தீப்பொறிகளை வாயு பகவானும் அக்னி பகவானும் தாங்கிச் சென்று, கங்கையிடம் அளித்தனர்.

கங்கை நதி அந்தப் பொறிகளை இமயமலையில் இருந்த சரவணப் பொய்கை (நாணல் காடு நிறைந்த குளம்) என்னும் புனிதத் தீர்த்தத்தில் சேர்த்தது.அங்கு அந்த ஆறு பொறிகளும் ஆறு குழந்தைகளாக மாறின. அவர்களைக் கார்த்திகைப் பெண்கள் வளர்க்க, அன்னை பார்வதி தேவி அந்த ஆறு குழந்தைகளையும் ஒன்றாக அணைத்தபோது, ஆறு முகங்களும் பன்னிரண்டு கரங்களும் கொண்ட ‘சண்முகனாக’ முருகப் பெருமான் அவதரித்தார். முருகப் பெருமான் அவதரித்த மூலப் பொய்கை இமயமலையில் இருந்தாலும், அவனது அருள் நிரம்பிய தமிழகத்தின் பல்வேறு முக்கியத் தலங்களிலும் ‘சரவணப் பொய்கை’ என்ற பெயரில் தீர்த்தங்கள் அமையப் பெற்றுள்ளன.

22. திருப்பரங்குன்றத்திலும் பழனியிலும்

முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதலாவது வீடான திருப்பரங்குன்றத்தில், மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள சரவணப் பொய்கை உலகப் புகழ்பெற்றது. சூரபத்மனை வதம் செய்வதற்காகப் புறப்படுவதற்கு முன், முருகப் பெருமான் தன் வேற்படையைக் கொண்டு பாறையைத் துளைத்து இந்தத் தீர்த்தத்தை உருவாக்கினார் என்று ஸ்தல புராணம் கூறுகிறது. இக்குளத்து நீர் மடப்பள்ளி, அபிஷேகம் மற்றும் பக்தர்களின் பாவன தீர்த்தமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் கரையில் சுப்பிரமணியர், காசி விஸ்வநாதர் சந்நதிகளும் உள்ளன. இந்தத் தீர்த்தத்தில் நீராடினால் தீராத நோய்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. பழநி திருத்தலத்திலும், அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற சரவணப் பொய்கை அமைந்துள்ளது.

23. திருச்செந்தூர் சரவணப் பொய்கை

கடற்கரைத் தலமான திருச்செந்தூரிலும் முருகப் பெருமானின் அவதாரத்தை நினைவூட்டும் வண்ணம் சரவணப் பொய்கை என்ற பெயரில் தீர்த்தம் அமைந்துள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சற்றே வெளியே, நாழிக் கிணற்றுக்கு அருகில் இந்தச் சரவணப் பொய்கைக் குளம் அமைந்துள்ளது. கடலுக்கு மிக அருகில் இருந்தாலும், இத்தலத்துத் தீர்த்தங்கள் நன்னீராக இருப்பது இறைவனின் பெருமைகளில் ஒன்றாகும்.

தமிழகத்தின் இன்னும் பல புகழ்பெற்ற முருகன் கோயில்களிலும் (உதாரணமாக: மருதமலை, ஓதிமலை, குன்றத்தூர், வடபழநி) உள்ள திருக்குளங்களுக்குச் ‘சரவணப் பொய்கை’ என்றே பெயரிடப்பட்டுள்ளது.

24. ஹ்ருத்தாபநாசினி

சென்னைக்கு அருகில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூர்ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் திருக்கோயிலும், அங்குள்ள “ஹ்ருத்தாபநாசினி” தீர்த்தமும் அற்புதமானது. அழகாகவும் கம்பீரமாகவும் அமைத்த திருக்குளம். அமாவாசை தர்ப்பணத்திற்குப் பெயர் பெற்றது.ஹ்ருத் = இதயம் (மனம்), தாப = தாபம் (துன்பம், கவலை, பாவம் ,நாசினி = அழிப்பது அதாவது, “மனதில் உள்ள கவலைகளையும், பாவங்களையும் வேரோடு அழிக்கும் தீர்த்தம்” என்று இதற்குப் பொருள். இந்தத் திருக்குளத்தில் தான் ஒவ்வொரு வருடமும் தை மற்றும் ஆடி மாதங்களில் புகழ்பெற்ற தெப்பத் திருவிழா மிக விமர்சையாக நடைபெறும். அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எம்பெருமான் குளத்தை வலம் வரும் போது, குளத்து நீரில் தீபங்கள் மிதக்கவிடப்படும் காட்சி ஆன்மிகப் பரவசத்தை ஊட்டும். இராமேஸ்வரம், காசி, கயா ஆகிய தலங்களுக்குச் சென்று பித்ரு கடன்களை (தர்ப்பணம்) செலுத்த முடியாதவர்கள், திருவள்ளூர் ஹ்ருத்தாபநாசினி குளக்கரையில் வந்து தர்ப்பணம் கொடுத்தால் அதற்கு இணையான பலன் கிட்டும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

25. மஹாமகக்குளம் கும்பகோணம்

தென்னகத்துக் “கயா” என்றும், தமிழ் நாட்டின் ஆன்மிகக் கேந்திரம் என்றும் போற்றப்படும் கும்பகோணத்தின் மையப் பகுதியில் சுமார் 6.2 ஏக்கர் பரப்பளவில் அமைந்தது இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்குளம். பிரளய காலத்தில் உலகை மீண்டும் சிருஷ்டிப்பதற்காக (படைப்பதற்காக), பிரம்மதேவன் அனைத்து ஜீவராசிகளின் வித்துக்களையும், அமுதத்தையும் ஒரு கும்பத்தில் (குடத்தில்) வைத்து இமயமலையிலிருந்து மிதக்கவிட்டார். பிரளய வெள்ளத்தில் மிதந்து வந்த அந்த அமுதகும்பம், தென் திசையில் தங்கிய இடமே கும்பகோணம் ஆகும்.

சிவபெருமான் ஒரு வேடன் உருவத்தில் வந்து, தன் அம்பினால் அந்த அமுதகும்பத்தை உடைத்தார். அதிலிருந்து அமுதம் நாலாபுறமும் சிதறிப் பெருகியது. அப்படி அமுதம் திரண்டு தேங்கிய மிக முக்கிய இடமே இந்த மஹாமகக்குளம் ஆகும். எனவே, இது அமுதத் தீர்த்தமாகக் கருதப்படுகிறது.

26. ஒரே குளத்தில் 20 புனித தீர்த்தக் கிணறுகள்

மஹாமகக்குளத்தின் உள்ளே 20 புனித தீர்த்தக் கிணறுகள் அமைந்துள்ளன. இவை ஒவ்வொன்றும் பாரதத்தின் முக்கிய நதிகள் மற்றும் தேவதைகளின் பெயர்களால் அழைக்கப்படுகின்றன. வாயு தீர்த்தம், கங்கா தீர்த்தம், யமுனா தீர்த்தம், கோதாவரி தீர்த்தம், நர்மதா தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், காவேரி தீர்த்தம், கன்யா தீர்த்தம் போன்றவை இதில் அடங்கும். இக்குளத்தைச் சுற்றி 16 பிரசித்தி பெற்ற சோடச லிங்க சந்நதிகள் (மண்டபங்கள்) அமைந்துள்ளன. பக்தர்கள் குளத்தில் நீராடும்போது இந்த 16 லிங்கங்களையும் வழிபடுவது மரபு. வட இந்தியாவில் ‘கும்பமேளா’ எப்படி உலகப் புகழ்பெற்றதோ, அதேபோலத் தென்னகத்தில் ‘மஹாமகத் திருவிழா’ மிக விசேஷமானது.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை, மாசி மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று, மகம் நட்சத்திரமும் சிம்ம ராசியில் குரு பகவானும், கும்ப ராசியில் சூரியனும் இணையும் புண்ணிய காலத்தில் இந்த மஹாமகம் நடைபெறும். கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவேரி, கிருஷ்ணா, துங்கபத்ரா ஆகிய 9 புனித நதிகளும் (நவநதிகள்) மனிதர்கள் தங்களிடம் கழுவிய பாவங்களை நீக்கிக் கொள்ள, இந்த மஹாமக நாளில் கன்னிப் பெண்களின் வடிவில் வந்து இக்குளத்தில் நீராடி, தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்கின்றன என்பது ஐதீகம்.

27. மாசிமக தீர்த்தவாரி

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மஹாமகம் தவிர, ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரத்தன்று ‘மாசிமகம்’ சிறப்பாகக் கொண்டாடப்படும். அன்றைய தினம் கும்பகோணத்தில் உள்ள 12 சிவாலயங்களின் (ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர் போன்றவை) உற்சவ மூர்த்திகளும், இக்குளக்கரையில் எழுந்தருளி ‘தீர்த்தவாரி’ காண்பார்கள். ஒரே இடத்தில் அனைத்து தெய்வங்களும் தீர்த்தம் கொடுக்கும் இந்த வைபவம் காண்போரைக் சிலிர்க்க வைக்கும்.”கும்பகோணத்தில் உள்ள இதர தீர்த்தங்களில் செய்த பாவங்கள் மஹாமகக் குளத்தில் நீராடினால் போகும்; ஆனால் மஹாமகக் குளத்தில் செய்யும் பாவங்கள் அங்கேயே தான் தங்கும்” என்று இதன் புனிதத்துவத்தை ஆன்மிகப் பெரியோர்கள் எச்சரித்துக் கூறுவார்கள்.

28. சித்தாமிர்த குளம்,வைத்தீஸ்வரன் கோயில்

நவகிரகங்களில் செவ்வாய் தலமாகவும், பிணிகளைத் தீர்க்கும் தலமாகவும் திகழும் வைத்தீஸ்வரன் கோயிலில் வீற்றிருக்கும் இறைவன்ஸ்ரீ வைத்தியநாத சுவாமி ‘அனைத்து நோய்களையும் தீர்க்கும் மருத்துவர்’ என்றால், அவனது சந்நதிக்கு வெளியே இருக்கும் இந்தச் ‘சித்தாமிர்த குளம்’ நோய்களைக் குணமாக்கும் ஒரு தெய்வீக மருந்தாகும்.சித்தாமிர்தம் = சித்தர்கள் + அமிர்தம். புராண காலத்தில் கிருத யுகத்தில் வாழ்ந்த பல சித்தர்கள், இந்தத் தலத்து இறைவனை வழிபட்டு அட்டமா சித்திகளையும், ஞானத்தையும் பெற்றனர்.

அவர்கள் தாங்கள் தயாரித்த தெய்வீக மூலிகைகளையும், தேவாமிர்தத்தின் ஒரு பகுதியையும் இக்குளத்து நீரில் கலந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இக்குளத்து நீர் வெறும் தண்ணீராக இல்லாமல், சகல நோய்களையும் தீர்க்கும் “மூலிகை அமுதமாக” மாறியது. இதனால் தான் இதற்குச் ‘சித்தாமிர்த குளம்’ என்று பெயர் வந்தது. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் உள்ளவர்கள், இந்தச் சித்தாமிர்த குளத்தில் நீராடி அங்காரகனை வழிபட்டால் தோஷங்கள் விலகும். உடலில் உள்ள நோய்களை மட்டுமன்றி, மனதிலுள்ள கவலைகளையும் கரைத்து, ஆரோக்கியமான வாழ்வைத் தரும் உன்னதத் தீர்த்தம் இந்த வைத்தீஸ்வரன் கோயில் சித்தாமிர்த குளம்!

29. திருவாரூர் கமலாலயம் திருக்குளம்

கமலாலயம் = கமலம் (தாமரை) + ஆலயம் (இருப்பிடம்). கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி” என்ற புகழ்பெற்ற பழமொழிக்கு ஏற்ப, திருவாரூர்ஸ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோயிலும், அதற்கு இணையாக சுமார் 25 ஏக்கர் (5 வேலி நிலப்பரப்பு) பரப்பளவில் அமைந்துள்ள இந்த கமலாலயக் குளமும் தமிழகத்தின் மிகப்பெரிய ஆன்மிக அடையாளங்களில் ஒன்றாகும். பாரத தேசத்தின் மிக முக்கிய “ஆகாச தீர்த்தமாக” இது போற்றப்படுகிறது. இக்குளத்து நீரில் எப்போதும் ஒருவித தெய்வீகத் தன்மை நிறைந்து விளங்கும். கமலாலயக் குளத்தின் நடுவே அமைந்துள்ள “நடுவண் நாதர்” (அனந்தேஸ்வரர்) கோயிலும், அங்கு வீற்றிருக்கும் “மாற்றுரைத்த பிள்ளையார்” சந்நதியும் அற்புதமாக இருக்கும்.

30. சுந்தரர் வரலாறும் கமலாலயமும்

திருவாரூர் தியாகேசரிடம் அளவற்ற பக்தி கொண்ட நாயன்மாரான சுந்தரமூர்த்தி நாயனார், பரவையாரை மணம் முடித்த பின், அங்கு அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப் பொன் தேவைப்பட்டது. எம்பெருமான் தியாகராஜர் சுந்தரருக்குத் திரவியமாகப் (பொன்) பொதி அளித்தார். அந்தப் பொன்னின் தரம் (மாற்று) சரியானது தானா என்று சுந்தரருக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. அப்போது தியாகேசர், “சுந்தரா, குளத்தின் நடுவே இருக்கும் விநாயகரிடம் இதைக் காட்டி உரைத்துப் பார்” என்றார். சுந்தரரும் குளத்தின் நடுவே சென்று, அங்கிருந்த விநாயகரிடம் பொன்னைத் தந்து தரம் பார்த்தார்.

அந்த விநாயகரே இன்றளவும் “மாற்றுரைத்த பிள்ளையார்” என்று அழைக்கப்படுகிறார். இவரைத் தரிசிக்கப் படகுகள் மூலம் குளத்தின் நடுவே செல்ல வேண்டும். திருவாரூர் ஆழித் தேரோட்டம் எப்படி உலகப் புகழ்பெற்றதோ, அதேபோலக் கமலாலயக் குளத்தில் நடைபெறும் தெப்பத் திருவிழாவும் கண்கள் கொள்ளாக் காட்சியாகும். நாட்டின் மிகப்பெரிய தெப்பங்களில் ஒன்றான திருவாரூர் தெப்பம், இந்த பிரம்மாண்டமான குளத்தில் அசைந்து வரும் அழகைக்காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். அப்பர் பெருமான் தன் தேவாரப் பாடலில், இந்தத் தெப்பத் திருவிழாக் கோலத்தைக் கண்டு பரவசமடைந்து பாடியுள்ளார். இப்படிப்பட்ட புனிதத் திருக்குளங்கள் பல உண்டு.

எஸ். கோகுலாச்சாரி

 

Related Stories: