சென்னை: சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர இருப்பதாகவும், ஆளும் தவெக கட்சியின் உறுப்பினராக இருந்தாலும் அத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின் போது தாங்கள் சொல்லும்படி நடந்து கொண்டால் சன்மானமாக 35 கோடி ரூபாய் வரை தருவதாக பேரம் பேசியதாக ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ என்.இளையராஜா சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த திருவல்லிக்கேணி போலீசார், சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த யூடியூபர் திருநாவுக்கரசு, திருச்சியைச் சேர்ந்த நரேஷ், சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜின் சகோதரர் அசோக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் எம்.எல்.ஏவும் சம்பந்தப்பட்டு இருப்பதால், மனுவை எம்.பி., எம்.எம்.ஏ.,க்கள் தொடர்புடைய வழக்குகளை விசாரிக்கும் அமர்வில் பட்டியலிட வேண்டும் என்று காவல்துறை தரப்பில் கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த மனுவை எம்.பி. எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார்.
* லுக் அவுட் நோட்டீசை எதிர்த்து வழக்கு
அரசு வேலைக்கு பணம் பெற்றதாக கூறி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத் துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கில், அசோக்குமாருக்கு எதிராக அமலாக்கத் துறை கடந்த ஆண்டு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது. இந்த லுக் அவுட் நோட்டீசை திரும்ப பெற அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக்கோரி அசோக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பதில் மனு தாக்கல் செய்ய ஒன்றிய அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், அசோக்குமாரின் மனு மீதான விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
