லோக் ஆயுக்தா சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த நடவடிக்கை கோரி வழக்கு: தமிழக அரசு பதில்தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவுக்கு ஆறு வாரங்களில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிப்பதற்காக ஒன்றிய அரசு, லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தை 2013ம் ஆண்டு கொண்டுவந்தது. இந்த சட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம் 2018ம் ஆண்டு இயற்றப்பட்டு 2018 நவம்பர் முதல் அமலுக்கும் வந்தது.

இந்நிலையில், இந்த சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி தஞ்சாவூரைச் சேர்ந்த வி.ஜீவகுமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படவில்லை. 2019 முதல் 2024 வரை 617 புகார்களை லோக் ஆயுக்தா அமைப்பு முடித்து வைத்துள்ளது. 2025ம் ஆண்டு டிசம்பர் வரை 137 புகார்கள் நிலுவையில் உள்ளன.

இது குறித்து லோக் ஆயுக்தா இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எத்தனை வழக்குகளில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, நிலுவையில் உள்ள வழக்குகளின் நிலையில் என்ன என்பது குறித்த விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. லோக் ஆயுக்தா செயலாளராக, துணை செயலாளர் அந்தஸ்து அதிகாரியை நியமிக்க கூறியுள்ள நிலையில் ஓய்வு பெற்ற அல்லது பணியில் உள்ள மாவட்ட நீதிபதியை செயலாளராக நியமிக்கும் வகையில் விதிகளை திருத்தி 2020ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள சட்டத்தை மீறிய செயலாகும். எனவே, செயலாளர் நியமனம் தொடர்பாக விதிகளை திருத்தி வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எம்.வேல்முருகன், கிரிஜா வேல்முருகன் ஆகியோர் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு 6 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாமாறு தமிழக மனிவள மேம்பாட்டு துறை, உள்துறை செயலாளர், பொதுத்துறை செயலாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

 

Related Stories: