சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக 2026 ஆண்டுக்காக விருதுகள் வழங்கும் விழா தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில், விருதுகளை வழங்கி விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது: விசிக ஏன் 234 தொகுதிகளில் போட்டியிடவில்லை, அதற்கான வலிமையை ஏன் திருமாவிடம் கொடுக்கவில்லை என்பது குறித்து நாம் விவாதித்ததில்லை.
எதன் அடிப்படையில் தவெகவை ஆதரிக்கிறீர்கள், திமுக கூட்டணியை விட்டு வெளியே வருவதற்கான நெருக்கடி எங்கே ஏன் வந்தது, ஏன் அதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்று கேட்கிற இளைஞர்கள் தான் விசிகவிற்கு வேண்டும். பாஜவில் அமைச்சரானால் அதனை ஏன் தவிர்க்கிறீர்கள், அமைச்சரானால் அங்கு எனக்கு பதவி வாங்கி கொடுங்கள் என்று கேட்பவர்கள் என்னுடன் இருந்ததால் எனது 35 ஆண்டு கால உழைப்பு வீணாகிவிட்டது, அரசியல் புரிதல் உள்ளவர்களை வளர்த்தெடுக்கவில்லை என்பதே பொருள்.
அதனை நினைத்தே, நான் நொந்துக் கொண்டுள்ளேன். பதவி ஆசையால், சோபாவில் பணம் வருவதால் நான் இப்படி செயல்படுவதாக கூறுகின்றனர். நூற்றுக்கணக்கான கோடியை சோபாவிலா கொண்டு வந்து கொடுப்பார்கள்?. எனது தாமதத்தை சோபா, பார்ட்டி பண்ட், துணை முதல்வர், முதல்வர் பதவிக்காக என பலவகைகளில் என்னை விமர்சனம் செய்கிறார்கள். சிலவற்றை வெளிப்படையாக பேச முடியாது. வாய்ப்புகளை நான் நிராகரித்தேன்.
திமுகவுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக பேசுகிறார்கள். திமுகவுக்கு நான் துரோகம் இழைத்தேனா? எனது நட்பு எவ்வளவு தூய்மையானது என்று அனைவருக்கும் தெரியும். எத்தகைய நெருக்கடிகளிலும், அதிமுகவுடன் விசிக வந்தால், பாஜ கூட்டணியில் இருக்காது என எத்தனையோ பேர் பேசினாலும் திமுக கூட்டணியைவிட்டு நான் வெளியேறினேனா? திமுக கூட்டணியில் விசிக இல்லை என்பதை திமுகவே அறிவித்துவிட்டது.
விசிக இன்னும் அறிவிக்கவில்லை. தவெக கூட்டணி அமைந்தால் அதில் விசிக இடம்பெறும். திமுக தலைவர்கள் விசிகவில் இருந்து விலகிய ஒருவரை கட்சியில் சேர்த்தபோதே விசிகவோடு எங்களுக்கு எந்த உறவும் இல்லை என்பதை கூறிவிட்டது. காதலர்கள் கொலை வழக்கில் கூட உள்ளதைதான் பேசினோம். சமூக வலைதளங்களில் போகாமல் இருந்தாலே விசிக உறுப்பட்டுவிடுவோம். அங்கு கழிசடைகளாக இருக்கிறார்கள்.இவ்வாறு அவர் பேசினார்.
