சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: திருச்சி மாவட்டம் உறையூர் பகுதியில் பட்டப்பகலில் பள்ளி மாணவர்கள் போதைப் பொருள் பயன்படுத்துவது போல ஊடகங்களில் வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள் தமிழகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் எந்தளவுக்கு வேரூன்றியிருக்கிறது என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.
எந்தவித தடையுமின்றி சுலபமாகவும், சுதந்திரமாகவும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சர்வ சாதாரணமாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களைப் பார்க்கும் போது, தமிழக அரசு அறிவித்தது போதைப் பொருள் தடுப்பு படையா அல்லது போதைப் பொருளை தடுக்க முடியாத படையா என்ற கேள்வியை எழுப்புகிறது.
எனவே, தமிழகத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை அடியோடு ஒழிப்பதற்கு போதைப் பொருள் தடுப்பு படையை முழு செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
* வாய் சவடால் காங்கிரஸ்
டிடிவி. டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், ‘‘மேகதாதுவில் ஒரு செங்கல்லை கூட வைக்க விடமாட்டோம் என தமிழக காங்கிரஸ் கட்சியினர் இங்கு வெற்று வாய் சவடால் விட்டு கொண்டிருக்கும் அதே வேளையில், மேகதாது பகுதிகளில் கர்நாடக காங்கிரஸ் அரசு கட்டுமான பணிகளை தொடங்கியிருப்பதன் மூலம் காவிரி விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியை நம்பி எந்தவித பயனும் இல்லை என்பதை முதல்வர் விஜய் இனியாவது உணர வேண்டும்.
எனவே, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக காவிரியில் கட்டுமான பணிகளை மேற்கொண்டிருக்கும் கர்நாடக அரசு மீது உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதோடு, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்திட வேண்டும் என முதல்வரை கேட்டு கொள்கிறேன்’ என்று கூறி உள்ளார்.
