தவெக அறிவித்த முழு பயிர்க்கடன் தள்ளுபடி மறுப்பு மன உளைச்சலுக்கு ஆளான விவசாயி உயிரிழந்தது வேதனை: ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் கடந்த 4ம்தேதி விவசாய அமைப்புகள் சார்பில் நடத்தப்பட்ட போராட்டங்களிலும் சிறு, குறு விவசாயியான சோமசுந்தரம் கலந்து கொண்டார். போராட்டத்தை முடித்துக் கொண்டு நேற்று அதிகாலை 3.30 மணிக்கு வீடு திரும்பிய அவர், அடுத்த சிறிது நேரத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு முழுமையாக கடன் தள்ளுபடி செய்யப்படாததால் ஏற்பட்ட மன உளைச்சல் தான் காரணம். எனவே, தவெக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தவாறு சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். மன உளைச்சலால் உயிரிழந்த விவசாயி சோமசுந்தரத்தின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* மேகதாது குறித்து ஆலோசிக்க அனைத்துக்கட்சி கூட்டம்
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை பாமக தலைவர் அன்புமணி மற்றும் பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் சவுமியா அன்புமணி, கணேஷ்குமார், சிவக்குமார் உள்ளிட்டோர் சந்தித்தனர். பின்னர் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, முதல்வரின் தனி ஆலோசகர், நீர்வளத்துறை அதிகாரிகள், பொறியாளர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் நிருபர்களிடம் அன்புமணி கூறியதாவது: தமிழ்நாடு அரசு ஒரு லட்சம் கோடி ரூபாய் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு நீர் திட்டங்களுக்கு முதலீடு செய்ய வேண்டும். தமிழகத்தில் கடன் சுமை இருந்தாலும் முக்கியமாக நீர்த்திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். மேகதாது விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. மேகதாது அணை கட்டக்கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளோம்.

முதலமைச்சர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் கூட்ட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் முதலமைச்சருடன் சென்று பிரதமரை சந்திக்க வேண்டும். மேகதாது நடுவன் மன்றம் தேவையற்றது. மேகதாது அணையை தடுக்க பல்வேறு வகையான வழக்குகளை நாம் தொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: