சென்னை: கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் உண்மையான விசுவாசிகள் அல்ல. அதிமுகவை பலவீனப்படுத்தவும், நிர்மூலமாக்கவும் நினைப்பவர்கள் எண்ணம் எப்போதும் நடக்காது என்று எடப்பாடி பழனிசாமி பேசினார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் இருந்து பல்வேறு நிர்வாகிகளும், எம்எல்ஏக்களும் அக்கட்சியில் இருந்து விலகி, தவெகவில் இணைந்து வருகின்றனர்.
அதே சமயம், தேர்தல் முடிவுகள் குறித்தும், அதிமுகவின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிப் பணிகள் குறித்தும், வரவிருக்கும் இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் குறித்து அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுடன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று 6வது நாளாக தஞ்சாவூர் மாநகர், கிழக்கு, மத்தியம், தெற்கு, சிவகங்கை ஆகிய அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் அந்தந்த மாவட்டத்துக்கு உட்பட்ட நிர்வாகிகள் பங்கேற்று, தங்களது கருத்துகளை தெரிவித்தனர். அதன்படி, தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பகுதிச் செயலாளர் பத்ம குமரேசன், ஆலோசனை கூட்டத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார். இதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பதில் கொடுத்துள்ளார்.
வழக்கமாக சசிகலா அல்லது டிடிவி. தினகரன் பெயரை எடுத்தாலே காட்டமாக பதிலளிக்கும் எடப்பாடி பழனிசாமி, இந்த முறை மிகவும் அமைதியாகவும் பொறுமையாகவும் பதிலளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுக பல வெற்றி, தோல்விகளைக் கண்ட இயக்கம். தற்போதைய தேர்தல் வெற்றிக்கான காரணம் என்ன என்பதை ஆராய வேண்டிய அவசியமில்லை. மக்களை கவர்ந்த ஒரு மாயை உருவாக்கப்பட்டது. அந்த கவர்ச்சியை நம்பி மக்கள் வாக்களித்துள்ளனர்.
ஆனால் கடந்த ஒரு மாத காலத்திலேயே அதன் உண்மையை மக்கள் உணர தொடங்கியுள்ளனர். தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது அரசியலில் சகஜமானது. பீனிக்ஸ் பறவையைப் போல அதிமுக மீண்டும் எழுச்சி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமரும். கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் உண்மையான விசுவாசிகள் அல்ல. பதவி சுகத்திற்காகவும், தங்களது பணத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும் அவர்கள் மாற்றுக்கட்சிகளுக்கு சென்றுள்ளனர். அதிமுகவை பலவீனப்படுத்தவும், நிர்மூலமாக்கவும் சிலர் முயற்சித்து வருகின்றனர். அது எப்போதும் நடக்காது. கட்சித் தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்” என்றார்.
* டிடிவி.தினகரனை கட்சியில் சேர்க்க வேண்டும்
ஆலோசனை கூட்டம் முடிந்து வெளியேவந்து செய்தியாளர்களைச் சந்தித்த பத்ம குமரேசன், “ஆலோசனைக் கூட்டத்தில், டிடிவி.தினகரனை அதிமுகவில் சேர்க்க வேண்டும் எனும் எங்கள் பகுதியைச் சேர்ந்த தொண்டர்கள், பொதுமக்கள் மத்தியில் இருக்கும் கருத்தை, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்தேன். அதனை கேட்ட எடப்பாடி பழனிசாமி, ‘டிடிவி.தினகரன் தனியாக கட்சி நடத்தி வருகிறாரே’ என பதில் அளித்தார். டி.டி.வி.தினகரன் அதிமுகவில் சேர்ந்தால் கட்சி பலமடைந்து, வருங்காலங்களில் அதிமுக நிச்சயம் ஆட்சி அமையும்” என்றார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அமமுக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
