மு.க.ஸ்டாலின் கல்வெட்டை ஒரு வாரத்திற்குள் சீரமைத்து தராவிட்டால் திமுக சார்பில் மாபெரும் போராட்டம்: முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் எச்சரிக்கை

சென்னை: மு.க.ஸ்டாலின் பெயர் கொண்ட கல்வெட்டை ஒரு வாரத்திற்குள் சீரமைத்து தராவிட்டால் திமுக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று அளித்த பேட்டி: கடந்த திமுக ஆட்சியில் நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் இரண்டாவது பெரிய அலகை 24.2.2024 அன்று முன்னாள் முதல்வர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்திற்கான கல்வெட்டும் அப்போது அதனருகே திறந்து வைக்கப்பட்டிருந்தது. தற்போதைய முதல்வர் இன்று ஆய்வுக்கு செல்கிறார் என மூன்று நாட்களுக்கு முன்பாகவே கம்பீரமாக நின்ற அந்த கல்வெட்டை துணியால் மூடி தலைவரது பெயரை எல்லாம் நீக்கி உள்ளனர். இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்ட போது கல்வெட்டு சிதிலம் அடைந்துள்ளதாகவும் ஒருவாரத்தில் சரி செய்து கொடுப்பதாகவும் கூறி உள்ளனர்.

இன்னும் ஒருவாரத்தில் மீண்டும் பழையபடி கல்வெட்டு சீரமைக்கப்படவில்லை என்றால் மாவட்ட திமுக சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெறும் என்பதை எச்சரிக்கையாக தெரிவிக்க விரும்புகிறேன். இதுபோல பல இடங்களில் நாங்கள் கொண்டுவந்த திட்டங்களை மறைப்பதும், அதன் மீது ஸ்டிக்கர் ஒட்டுவதும் நடந்து வருகிறது. இது மிக,மிக கண்டிக்கத்தக்கது. இவர்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்து 50 நாள் ஆனது, இதுவரை இன்னும் அவர்களுடைய திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை.

எனவே இதுபோன்ற வேலைகளை விட்டுவிட்டு புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும். டிஎன்பிஎஸ்சி மூலம் 41 பேருக்கு வேலை கொடுத்துள்ளார்கள். அதுவும் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது தான். அப்பாயின்ட்மெண்ட் ஆர்டர் மட்டும்தான் இவர்கள் கொடுத்தது. பத்திரப்பதிவு துறையில் 3.0 கடந்த திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டுவர தயாராக இருந்தது. அதையும் இவர்கள் கொண்டுவந்தது போல பரப்புகிறார்கள். இது மாதிரி திமுக ஆட்சியில் நாங்க கொண்டு வந்த திட்டங்களுக்கு எல்லாம் ஸ்டிக்கர் ஒட்டி அவர்கள் விளம்பரம் செய்யறாங்களே தவிர, புது திட்டங்கள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை.

எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் 50 ஆண்டுகள் செய்ய வேண்டிய சாதனைகளை எல்லாம் 5 ஆண்டுகளில் செய்து காட்டினார். இந்தியாவிலேயே தமிழ்நாடு சிறந்த மாநிலம் என்ற தகுதியை உருவாக்கிக் காட்டினார். இன்று அவரது பெயரை கல்வெட்டில் இருந்து எடுத்துட்டா அவர் பெயர் மறைந்துவிடும் என நினைக்கிறாங்க, ஆனா ஒவ்வொரு மக்களின் மனதிலும் கல்வெட்டாக பதிந்திருக்கிறார் எங்கள் தலைவர். கல்வெட்டில் நீக்கினாலும் மக்கள் மனதில் இருந்து எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரை நீக்க முடியாது.

இன்றும் தொடரும் மகளிர் உரிமை திட்டம், விடியல் பயணம் திட்டம், புதுமை பெண், தமிழ் புதல்வன், காலை உணவு திட்டம் இப்படி அனைத்து திட்டங்களும் எங்கள் தலைவர் பெயரை தான் சொல்லிக்கொண்டு உள்ளன. இந்த திட்டங்கள் எல்லாம் இருக்கிற வரையில் மக்கள் மனதில் இருந்து எந்த காலத்திலும் தலைவருடைய பெயரை புகழை அழிக்க முடியாது. அதேபோல நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிவிட்டார்கள். பெயரை மாற்றுவது கூட கவலை இல்லை.ஆனால் அந்த வெப்சைட்டில் இருக்கக்கூடிய மாணவர்களின் வீடியோக்களை எல்லாம் நீக்கி விட்டார்கள்.

மு.க.ஸ்டாலின் பெயரை பார்த்தாலே முதல்வர் விஜய்க்கு உதறுது. அதனால் தான் அவர் பெயர் உள்ள கல்வெட்டுகளை மறைத்து வருகிறார். முதல்வர் விஜய்க்கு ஒன்று சொல்லிக் கொள்கிறோம். ஸ்டிக்கர் மீது வைக்கும் நம்பிக்கைக்கு பதிலா நல்ல திட்டங்களை கொடுங்கள். அதை விடுத்து எங்களின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவது, கல்வெட்டுகளில் எங்கள் தலைவரின் பெயர் நீக்குவது போன்ற செயல்கள் தொடர்ந்தால் போராட்டம் வெடிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

* ஸ்டாலின் பெயரை கேட்டாலே விஜய்க்கு உதறுது
திமுக சட்டத்துறை இணை செயலாளரும், எழும்பூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான இ.பரந்தாமன் அளித்த பேட்டி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரை எங்கு பார்த்தாலும், ‘‘சும்மா அதிருதில்ல என்பதை போன்று முதல்வருக்கு உதறுகிறது” அதன் காரணமாகவே முதல்வர் செல்லும் இடமெல்லாம் மு.க.ஸ்டாலின் கல்வெட்டு இருக்கக் கூடாது என்ற நோக்கத்தோடு இதனை அகற்றி வருகிறார்கள். டிஐபிஆர்ஐ தவெகவின் ஐடி விங் போன்று பயன்படுத்தி வருகிறார்கள்.

முதல்வர் நடித்த கில்லி படத்தில் பிளேடு மேல் வைத்த நம்பிக்கையை உன் மீது வை என்ற வசனம் வரும். அதேபோல் ஸ்டிக்கர் மேல் வைக்கும் நம்பிக்கையை, நல்ல திடமான திட்டதை முதல்வர் வெளியிடுங்கள். ஸ்டிக்கரை ஒட்டும், கல்வெட்டுகளை நீக்கும் வேலை வேண்டாம். இது தொடர்ந்தால் தமிழ்நாடு ஸ்தம்பிக்கும் அளவிற்கு போராட்டம் நடத்தப்படும். ஒவ்வொன்றுக்கும் போராட்டம் நடத்த முடியாது.

ஒட்டு மொத்தமாக பாலியல் குற்றங்களுக்கு எதிராக திமுக மாணவரணி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது அரசாங்கத்தின் மீது கவனத்தைக் கொண்டு வருவதற்கு நாங்கள் போராட்டத்தை நடத்தி வருகிறோம். நான் கண்ணைத் திறந்தே பார்க்க மாட்டேன் என்று இருக்கும் முதல்வரை ஒரு ஆறு மாதத்திற்கு வேடிக்கை பார்க்கிறோம். அதன் பிறகு தெருத்தெருவில் நாங்கள் மட்டுமல்ல பொதுமக்களே போராடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: