சென்னை: காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பட்டுப் பூங்காவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் விஜய்பாலாஜி ஆய்வு மேற்கொண்டு, அங்கு பணிபுரியும் நெசவாளர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் பட்டுச்சேலைகள் உற்பத்தியாவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர் விஜய்பாலாஜி, நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தமிழகம் முழுவதும் போலி பட்டுச்சேலைகள் விற்பனை மற்றும் இடைத்தரகர்கள் தொல்லை முற்றிலுமாக ஒழிக்கப்படும்.
நெசவாளர்கள் சிலர் கூலி உயர்வு போதுமானது என்றும், சிலர் கூடுதலாக வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும். பட்டுப்பூங்காவில் பட்டுச் சேலைகள் மட்டும் உற்பத்தி செய்யாமல் பட்டுக் குடைகள், பட்டு மணிபர்ஸ், பட்டுப்பாவாடைகள் என பட்டில் பல வகையான பொருட்களையும் தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பட்டுப் பூங்காவை சுற்றுலாத்துறையுடன் இணைத்து சுற்றுலா மையமாகவும் மாற்றவும் பரிசீலித்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
