புதுடெல்லி: ஒன்றிய அரசின் கடுமையான விதிமுறைகளால் இந்தியாவில் செயல்பட்டு வந்த பெரும்பாலான தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வெளிநாட்டு நிதி பெறும் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு முறைப்படுத்துதல் சட்டத்தின் (எஃப்சிஆர்ஏ) கீழ் பதிவு செய்யப்பட்ட தனியார் அமைப்புகளின் தரவுகளை கடந்த 2012ம் ஆண்டு முதல் பராமரிக்கத் தொடங்கியது.
அன்று முதல் இதுவரை மொத்தம் 52,159 தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் சங்கங்களுக்கு வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கான உரிமங்கள் வழங்கப்பட்டன. ஆனால், நிதிப் பரிமாற்றங்களில் வெளிப்படைத்தன்மை மற்றும் நிதி பயன்பாட்டை முறைப்படுத்தும் நோக்கில், கடந்த 2010ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தில் ஒன்றிய அரசு கடுமையான விதிமுறைகளைப் புகுத்தியது. இந்த புதிய விதிமுறைகளைப் பின்பற்றத் தவறிய மற்றும் தங்களது 5 ஆண்டுகள் காலாவதிக்குப் பிறகு உரிமத்தைப் புதுப்பிக்காத 15,206 நிறுவனங்களின் உரிமங்கள் காலாவதியானதாக அறிவிக்கப்பட்டன.
மேலும், கடந்த 2015ம் ஆண்டில் மட்டும் 10,000க்கும் மேற்பட்ட அமைப்புகள் தங்களது உரிமங்களை இழந்த நிலையில், இதுவரை மொத்தம் 22,498 தன்னார்வ நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டத்திற்கு எதிராகப் போராடிய சில தமிழக தன்னார்வ நிறுவனங்கள், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி அவற்றின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டது.
தற்போதைய நிலவரப்படி, பதிவு செய்யப்பட்ட ஒட்டுமொத்த நிறுவனங்களில் வெறும் 27.7 சதவீதம் அதாவது 14,455 தன்னார்வ நிறுவனங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. எஞ்சிய 72.3 சதவீதம் (52,184) நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது காலாவதியாகிவிட்டன. மாநில வாரியான பட்டியலில் 2,104 செயல்முறையிலுள்ள நிறுவனங்களுடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது; இங்கு 2,865 உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் 1,774 உரிமங்கள் காலாவதியாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 5,440 நிறுவனங்களில் 1,583 நிறுவனங்கள் மட்டுமே தற்போது செயல்பாட்டில் உள்ளன; அங்கு 2,211 உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு, 1,646 உரிமங்கள் காலாவதியாகியுள்ளன. உரிமங்கள் ரத்து மற்றும் காலாவதியான பட்டியலில் பீகார் மாநிலம் 85.2 சதவீதத்துடன் முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து உத்திரப்பிரதேசம் 83.7 சதவீதம், நாகாலாந்து 83.3 சதவீதம், திரிபுரா 80 சதவீதம், மகாராஷ்டிரா 78.9 சதவீதம், மணிப்பூர் 78.6 சதவீதம் மற்றும் மேற்கு வங்கம் 78.2 சதவீதத்துடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. வடகிழக்கு மாநிலங்களில் பெரும்பாலான தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உரிமங்கள் பெருமளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
