புதுடில்லி: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் வழக்கில், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் குற்றவாளி என தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. ஜம்மு – காஷ்மீரின் சுற்றுலா தலமான பஹல்காமில் கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 22ல் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். பிறகு பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. முக்கிய சதிகாரராக பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி சஜித் ஜாட் பெயர் இடம்பெற்று இருந்தது. இந்நிலையில் இன்று சிறப்பு நீதிமன்றத்தில் மற்றொரு குற்றப்பத்திரிகையை என்ஐஏ தாக்கல் செய்துள்ளது.
இதில் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதி லஷ்கர் இ தொய்பா தலைவன் ஹபீஸ் சயீத் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளான். இதனையடுத்து சயீத் மீது தனிப்பட்ட முறையிலும், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தைபா (LeT) மற்றும் அதன் சார்பு அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் ஆகியவற்றின் தலைவனாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
