முக்கூடலில் பிரசித்தி பெற்ற முத்துமாலையம்மன் கோவிலில் ஆனி திருவிழா கொடியேற்றம்

 

பாப்பாக்குடி, ஜூலை 6: நெல்லை மாவட்டத்தில் மூன்று நதிகள் கூடும் முக்கூடல் தாமிரபரணி நதிகரையில் அமைந்திருக்கும் பிரசித்தி பெற்ற முத்துமாலை அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆனி பெருந்திருவிழா 11 நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலையில் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், துர்க்கா லட்சுமி ஹோமம், கும்ப பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது. தொடர்ந்து முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் இருந்து செண்டை, நையாண்டி உள்ளிட்ட மேளங்கள் முழுங்க யானை மீது கொடி பட்டம் ஊர்வலமாக கோவிலை சுற்றி கொண்டு வரப்பட்டது.

தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று, கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதன்பின் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றது. இதில் முக்கூடல் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு ஆற்றங்கரையில் உள்ள கோயிலில் இருந்து ஊருக்குள் மேள தாளங்கள் முழங்க அம்பாள் சப்பரபவனி நடைபெற்றது. விழாவில் தினமும் காலையில் பவனி, மதியம் சிறப்பு பூஜை, அன்னதானம், மாலை யானை மீது தீர்த்தவாரி, இரவு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் பவனி மற்றும் இரவு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

ஜூலை 12ம்தேதி ஞாயிற்றுக்கிழமை 8ம் திருவிழாவில் பால்குட ஊர்வலம் நடைபெறுகிறது. 1 முதல் 9ம் திருவிழா வரை நிகழ்ச்சிகள் ஆதிமூலம் திடல், ஹரிராம்சேட் கலையரங்கத்திலும், 10 மற்றும் 11ம் திருவிழா நிகழ்ச்சிகள் கோயில் வளாகத்திலும் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்து நாடார் சமுதாயத் தலைவர் கதிரேஷ் ராம்சேட் தலைமையில் செயலாளர் லட்சுமி நாராயணன், பொருளாளர் விநாயகர் முத்துகிருஷ்ணன் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர். 1ம் திருநாள் ஏற்பாடுகளை ஹரிராம்சேட் நற்பணி மன்றம் மற்றும் நாடார் இளைஞரணி தலைவர் காளிமுத்து துரை தலைமையில் நிர்வாகிகள் முத்து மனோஜ், சியோன், பர்வீன் குமார், மாணிக்க சேட் ஆகியோர் செய்திருந்தனர்.

10 நாட்கள் இறைச்சி விற்க தடை
முத்துமாலை அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு முக்கூடல் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் பாரம்பரியமாக கடைப்பிடித்து வரும் கட்டுப்பாடுகளான ஆடு, மாடு, மீன், கருவாடு போன்ற இறைச்சிகள் விற்பனை செய்யவும், ஓட்டல்களில் அசைவ உணவுகள் விற்பனைக்கும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் முக்கூடல் பகுதியில் உள்ள எந்த ஓட்டல்களிலும் 10 நாட்களுக்கு அசைவ உணவு இல்லாமல் சைவ உணவு மட்டுமே சமைக்கப்படுகிறது. இந்த கட்டுபாட்டினை அப்பகுதி மக்கள் தலைமுறை தலைமுறையாக கடைபிடித்து வருகின்றனர்.

Related Stories: