வத்திராயிருப்பு, ஜூலை 6: வத்திராயிருப்பு ஆவுடையம்மன் சமேத நிவாஸ் பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. கோவில் முன்பாக அமைக்கப்பட்ட யாகசாலை மண்டபத்தில், கடந்த இரு நாட்களுக்கு முன் காப்புக் கட்டு வைபவத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், கோமாதா வழிபாடு உட்பட பல்வேறு விதமான சம்பிரதாய சடங்குகளுடன் முக்கால யாக பூஜைகள் நடந்தது.
மூன்றாம் நாளான நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. யாகசாலை மண்டபத்தில் பூஜிக்கப்பட்ட கும்பநீரால் பிரதான கோபுர கலசத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அபிஷேக நீர் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது. தொடர்ந்து பூரண கும்ப நீரால் பெருமாளுக்கும், ஆவுடையம்மனுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகமும் சிறப்பு அலங்காரமும் நடந்தது. தொடர்ந்து அம்மன் அருள்வாக்கு சொல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அனைத்து சமுதாயத்தினரும் திரளாக கலந்து கொண்டனர்.
