×

பரபரப்பான அரசியல் சூழலில் மழைக்கால கூட்டத்தொடர்; நாடாளுமன்றம் வரும் 20ம் தேதி கூடுகிறது: பல முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய திட்டம்

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 20ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 19 அமர்வுகள் நடைபெற உள்ள இந்தக் கூட்டத் தொடரில், அரசியலமைப்புத் திருத்தம் தேவைப்படும் பல முக்கிய மசோதாக்களை ஒன்றிய அரசு தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளதால், நாடாளுமன்றத்தில் கடும் விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆண்டுதோறும் ஜூலை 3வது வாரம் தொடங்கப்படுவது வழக்கம். இந்நிலையில், நடப்பாண்டிற்கான மழைக்கால கூட்டத்தொடர் தேதியை ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ நேற்று அறிவித்தார். அவர் தனது எக்ஸ் பதிவில், ‘‘ஒன்றிய அரசின் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி முர்மு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்ட ஒப்புதல் அளித்துள்ளார். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் குறித்து அர்த்தமுள்ள விவாதங்களும் முக்கிய முடிவுகளும் எடுக்க வரும் 20ம் தேதி முதல் ஆகஸ்ட் 13ம் தேதி வரை மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும்’’ என தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தொடரில் 25 நாளில் 19 அமர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அரசியலமைப்பு திருத்தம் தேவைப்படும் பல முக்கிய மசோதாக்களை ஒன்றிய அரசு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவற்றை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் கலந்து கொண்டு வாக்களிக்கும் உறுப்பினர்களில் 3ல் 2 பங்கு ஆதரவு அவசியம். இதனால் ஆளும் கூட்டணி மற்ற கட்சிகளின் ஆதரவையும் பெற வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.

குறிப்பாக, இந்த கூட்டத் தொடரில் அதிக கவனம் பெறும் மசோதாக்களில் 131-வது அரசியலமைப்புத் திருத்த மசோதா முக்கியமானதாகும். தொகுதி மறுவரையறை மசோதா என்று அழைக்கப்படும் இந்த மசோதா, சமீபத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டு மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை தொகுதிகளை மறுவரையறை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தற்போது 543 ஆக உள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்தவும் இந்த மசோதா வழிவகுக்கிறது. அதன் மூலம் மக்களவையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும் திட்டத்தையும் செயல்படுத்த ஒன்றிய அரசு விரும்புகிறது. இதற்கு முன்பு இந்த மசோதா தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவைப் பெற முடியாமல் தோல்வியடைந்த நிலையில், தற்போது திருத்தங்களுடன் மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இதுதவிர, மக்களவை, அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவும் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. மேலும், பிரதமர், முதல்வர்கள், ஒன்றிய, மாநில அமைச்சர்கள் 30 நாட்களுக்கு மேல் நீதிமன்றக் காவலில் இருந்தால், அவர்கள் தானாகவே பதவியை இழக்க வேண்டும் என்ற புதிய சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால் இந்த மசோதா அவையில் அனல் தெறிக்கும் விவாதங்களுக்கு வழிவகுக்கும். இதுதவிர, கல்வித் துறையில் மாற்றங்களை நோக்கமாகக் கொண்ட விக்சித் பாரத் கல்வி அதிஷ்டான் மசோதா, விளையாட்டு நிர்வாகத்தை வலுப்படுத்தும் ஊக்கமருந்து தடுப்பு திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் கொண்டு வர வாய்ப்புள்ளது.

மகாராஷ்டிரா, மே.வங்கத்தில் மாறிய அரசியல் கணக்குகள்
மேற்கு வங்களம், அசாம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல்களில் ஆளும் பாஜ கட்சி வெற்றி பெற்ற பிறகு நடைபெறும் முதல் முக்கியமான நாடாளுமன்றக் கூட்டம் என்பதால், அரசியல் ரீதியாகவும் இந்தக் கூட்டத் தொடர் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சிவசேனா (உத்தவ் அணி) கட்சிகளில் கடுமையான உட்கட்சி மோதல் ஏற்பட்டு அதிருப்தி எம்பிக்கள் பாஜவுக்கு தாவி உள்ளனர். திரிணாமுல் காங்கிரசின் 20 மக்களவை உறுப்பினர்களும், சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சியின் 6 உறுப்பினர்களும் தனிக் குழுவாக அங்கீகாரம் வழங்குமாறு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கோரிக்கை வைத்துள்ளனர். அந்த மனுக்களுக்கு இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

அமைச்சரவை மாற்றம் நிகழுமா?
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பாக ஒன்றிய அமைச்சரவை மாற்றப்படும் என கடந்த சில வாரங்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அதன் அடிப்படையில் வரும் 20ம் தேதிக்குள் ஒன்றிய அமைச்சரவை எந்த நேரத்திலும் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : New Delhi ,session ,Parliament ,Union government ,
× RELATED ஹைதராபாத்தில் அதிரடி உணவு கலப்பட வேட்டை: 122 டன் பொருட்கள் பறிமுதல்!