ஹைதராபாத்: ஹைதராபாத் நகரில் கலப்பட உணவுகளுக்கு எதிராகப் போலீசார் நடத்திய வேட்டையில், கடந்த 100 நாட்களில் மட்டும் 185 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சுமார் 122 டன் ஆபத்தான மற்றும் கலப்பட உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மாநகராட்சி மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையினருடன் இணைந்து, ஹைதராபாத் காவல்துறையின் கீழ் இயங்கும் ‘ஹெச்-பாஸ்ட்’ (H-FAST) என்ற தனிப்படை இந்த அதிரடி சோதனைகளை நடத்தியுள்ளது. இந்த சோதனையின் போது 27 டன் கலப்பட இஞ்சி-பூண்டு விழுது, கெமிக்கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 25 டன் பழங்கள், 30 டன்னுக்கும் அதிகமான கோழி இறைச்சிக் கழிவுகள், பழைய ஊறுகாய்கள், போலி டீ தூள் மற்றும் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பன்னீர் உள்ளிட்ட ஏராளமான சுகாதாரமற்ற உணவுப் பொருட்கள் அடியோடு பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து எச்சரித்துள்ள ஹைதராபாத் காவல் ஆணையர், உணவு கலப்படம் என்பது ஏதோ ஒரு சாதாரண விதிமீறல் அல்ல என்றும், பொதுமக்கள் உயிருடன் விளையாடும் இத்தகைய செயல்களைத் தங்களின் காவல்துறை ‘கொலை முயற்சிக்குச் சமமான குற்றமாகவே’ கருதுகிறது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த கலப்பட மாஃபியா கும்பல் மீது கடுமையான குண்டாஸ் சட்டம் பாயும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
பொதுமக்கள் தங்கள் பகுதியில் உணவு கலப்படம் குறித்து ஏதேனும் சந்தேகம் அடைந்தால், உடனே ‘டயல் 100’ அல்லது 8712661212 என்ற ஹெல்ப்லைன் எண்ணிற்குத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்றும், புகார் அளிப்பவர்களின் விவரங்கள் முற்றிலும் ரகசியமாக வைக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
