புதுடெல்லி: திருமணத்திற்கு புறம்பான உறவு வைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட கணவர் தனியுரிமை என்ற காரணத்தால் ஆதாரங்களை மறைக்க முடியாது, அவற்றை அவரது மனைவி சேகரிக்க நீதிமன்றத்தின் உதவியை நாடலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மன்மோகன், கே.வினோத் சந்திரன் ஆகியோர் அளித்த தீர்ப்பில், ‘‘திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்டதாகக் கூறப்படும் திருமணமான ஆணுக்கு, தனியுரிமை என்ற அடிப்படையில் நீதிமன்றம் உதவுவது பொது நலனுக்கு உகந்ததல்ல. திருமண உறவில் துரோகம் இழைப்பதை விவாகரத்துக்கான ஒரு காரணமாகச் சட்டம் அங்கீகரிக்கிறது.
எனவே இந்த வழக்கில் கணவரின் தொலைபேசி அழைப்பு விவரங்கள், ஓட்டல் முன்பதிவு, கட்டண விவரங்கள் மற்றும் அடையாள ஆவணங்கள் போன்றவற்றை மனைவி சேகரிக்க நீதிமன்றத்தின் உதவியை நாடலாம். தனியுரிமை என்பது அரசியலமைப்புச் சட்டத்தால் பாதுகாக்கப்படும் உரிமை என்றாலும், அது முழுமையான உரிமை அல்ல. பொது நலன் மற்றும் சட்டப்பூர்வமான நோக்கங்களுக்காக நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது’’ என உத்தரவிட்டனர்.
