சேலம் ஆத்தூர் முகாமில் இருந்த வங்கதேசத்தை சேர்ந்த 50 பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

ஆத்தூர்: ஆத்தூரில் முகாமில் தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 50 பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் பலத்த பாதுகாப்புடன் திருச்சிக்கு அழைத்துச்செல்லப்பட்டு ரயிலில் புறப்பட்டனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் தாசில்தார் அலுவலக வளாகத்தில் வங்கதேச முகாம் செயல்பட்டு வருகிறது.

இங்கு சட்டவிரோதமாக குடியேறுதல், உரிய ஆவணங்கள் இல்லாமல் போலி ஆவணங்கள் தயாரித்து பதுங்கி இருப்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைதானவர்கள் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். தற்போது முகாமில் 186 பேர் உள்ள நிலையில், தண்டனை காலம் முடிந்த 6பெண்கள் உட்பட 50 பேர் இன்று தங்களது சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் சென்னை புழல் சிறைச்சாலையில் இருந்து கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் வந்தவர்கள் ஆவர்.

இதில் பெரும்பாலானவர்கள் சென்னை மாங்காடு, திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தியம் காவல் நிலையங்களில், கடந்த 2025ம் ஆண்டு உரிய ஆவணங்கள் இல்லாமல் போலி ஆவணங்களை தயாரித்து தமிழ்நாட்டில் தங்கி இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சேலம் ஆயுதப்படை துணை கண்காணிப்பாளர் சக்திவேல் தலைமையில், வீரகனூர் இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் உள்பட 50 துப்பாக்கி ஏந்திய காவலர்களுடன் 3 வாகனங்களில் திருச்சி ஜங்ஷனில் இருந்து இன்று மதியம் 1.30 மணிக்கு ஹவுரா எக்ஸ்பிரஸ் மூலமாக தனி பெட்டியில் வங்கசேதம் புறப்பட்டனர். முன்னதாக ஆத்தூர் வங்கதேசம் முகாமில் இருந்து இன்று காலை 9 மணிக்கு 50 பேர் பாதுகாப்பாக அழைத்துசெல்லப்பட்டனர்.

Related Stories: