புளியங்குடி,ஜூலை 3: புளியங்குடி நகரின் பல்வேறு தெருக்களில் குடிநீர் குழாய்கள் உடைந்து, அதிகளவில் தண்ணீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். புளியங்குடி நகராட்சியின் பெருமாள் கோவில் தெரு, பஜனை மடதெரு உள்பட சில பகுதிகளில் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக சாலைகளில் குடிநீர் வீணாகி வருகிறது. ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாடு நிலவும் சூழலில், குழாய் உடைப்புகளால் நீர் வீணாவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குழாய்களில் இருந்து வெளியேறும் நீர் சாலைகளில் தேங்கி போக்குவரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், சாலை சேதமடைவதற்கும், சுகாதார கேட்டிற்கும் காரணமாக அமைகிறது. தொடர்ந்து குடிநீர் வீணாகி வருவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘உடைந்துள்ள குடிநீர் குழாய்கள் பல நாட்களாக சரி செய்யப்படாமல் உள்ளன. இதனால் குடிநீர் தேவையின்றி வீணாகி வருகிறது. உடைந்துள்ள குடிநீர் குழாய்களை உடனடியாக கண்டறிந்து பழுதுபார்க்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் வீணாவதைத் தடுக்கவும், சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யவும் அவசர நடவடிக்கைகள் அவசியமாக உள்ளன’ என்றனர்.
