செய்துங்கநல்லூர், ஜூலை 3: செய்துங்கநல்லூர் அருகே கர்ப்பிணிக்கு வழங்கப்பட்ட கர்ப்பகால நலத்திட்ட பெட்டகத்தில் பேரீச்சை பழம் மற்றும் நெய் இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு சார்பில் கர்ப்பிணிகளுக்கு 2 கட்டங்களாக வழங்கப்படும் நலத்திட்ட பெட்டகத்தில் பேரீச்சம்பழம், நெய், ஊட்டச்சத்து மாத்திரைகள், மதர் ஹார்லிக்ஸ் உள்ளிட்ட தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தேவையான பல்வேறு பொருட்கள் இடம் பெறுவது வழக்கம். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் செயல்படும் சேரகுளம் துணை சுகாதார நிலையத்தில், சின்னார்குளத்தைச் சேர்ந்த கர்ப்பிணி சிவகாமிக்கு செவிலியர் மூலம் கர்ப்பிணி ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.
வீட்டிற்கு சென்று இந்த பெட்டகத்தை திறந்து பார்த்தபோது 2 பேரீச்சம்பழ டப்பாக்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஒரு டப்பா காலியாக இருந்ததாகவும், பெட்டகத்தின் வெளிப்புற பட்டியலில் நெய் டப்பா இடம் பெற்றிருந்தும், உள்ளே நெய் இல்லாததும் தெரிய வந்தது. இதுகுறித்து செவிலியரிடம் கேட்டபோது, “எங்களுக்கு வந்த பெட்டகத்தை அப்படியே வழங்கி உள்ளோம். இதற்கு மேல் எங்களுக்கு எதுவும் தெரியாது” என தெரிவித்ததாக கூறப்படுகிறது. கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்டகத்தின் மீது, அதில் இடம்பெற்றுள்ள அனைத்து பொருட்களின் பட்டியலும் ஒட்டப்பட்டு இருக்கும். ஆனால் பட்டியலில் குறிப்பிடப்பட்ட பேரீச்சம்பழம் மற்றும் நெய் உள்ளிட்ட பொருட்கள் இல்லாமல், ஒரு பேரீச்சம்பழ டப்பா காலியாக இருந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊட்டச்சத்து பெட்டகத்தில் ஊழலா?
கர்ப்பிணி பெண்கள் மற்றும் கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்டகத்தில் கூட பொருட்கள் இன்றி இருப்பது வேதனை அளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், அந்தந்த பகுதிகளில் நேரில் சென்று பெட்டகங்களின் தரம் மற்றும் பொருட்கள் முழுமையாக உள்ளனவா என்பதை முறையாக ஆய்வு செய்யாததே இதுபோன்ற தவறுகளுக்கு காரணம் என்றும், இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி, இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இனி ‘செக்’ செய்து வழங்குவோம்
இதுதொடர்பாக கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரிடம் கேட்டபோது, “கர்ப்பிணி நலப் பெட்டகங்களை பெறும் போதே செவிலியர்கள் ஒவ்வொரு பெட்டகத்தையும் திறந்து, அனைத்து பொருட்களும் உள்ளனவா என்பதை சரிபார்த்த பின்னரே பெற்றுக்கொண்டு பயனாளிகளுக்கு வழங்க வேண்டும். இனி இதுபோன்ற குறைபாடுகள் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
