புதிய பாலம் திட்டம் விரைவுபடுத்தப்படுமா?

 

தூத்துக்குடி, ஜூலை 3: புதுக்கோட்டையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளால் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டும் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் உள்ள புதுக்கோட்டை பழைய பாலம் இருக்கும் இடத்தில் புதிய பாலம் கட்டும் பணியை விரைந்து செயல்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி- நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை பைபாஸ் சாலையில் மேம்பாலம் கட்டிய பிறகு நெல்லையில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாதாரண கட்டண பஸ்களும் புதுக்கோட்டை ஊருக்குள் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே புதுக்கோட்டை பழைய பாலத்தை இடித்துவிட்டு, அகலப்படுத்தி புதிய பாலம் கட்டி இவ்வழியாக புதுக்கோட்டை ஊருக்குள் பஸ்கள் வந்து செல்லும்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், வியாபாரிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தூத்துக்குடியில் இருந்து நெல்லை, ஸ்ரீவைகுண்டம், சாயர்புரம் உள்ளிட்ட வழித்தடத்திற்கு செல்லும் பஸ்கள் ஊருக்குள் வந்து செல்கின்றன. ஆனால் நெல்லை, ஸ்ரீவைகுண்டம், செக்காரக்குடியில் இருந்து தூத்துக்குடி நோக்கி வரும் எந்த பஸ்களும் புதுக்கோட்டை ஊருக்குள் வந்து செல்வதில்லை.
நெல்லை, ஸ்ரீவைகுண்டம், செக்காரக்குடியில் இருந்து வரும் பஸ்கள் புதுக்கோட்டைக்கு வெளியிலேயே பயணிகளை இறக்கி விட்டுவிட்டு சென்று விடுகின்றன. பகல் ஆனாலும், நள்ளிரவு ஆனாலும் அதே நிலைதான் இருந்து வருகிறது. வயதான முதியோர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், மாணவ, மாணவியர் என அனைவருமே தேசிய நெடுஞ்சாலையை தாண்டி ஊருக்குள் நடந்து செல்லும் ஆபத்தான நிலையைத்தான் அனுபவித்து வருகின்றனர். இதனால் அடிக்கடி விபத்துக்களும் நடந்து வருகின்றன.

இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், புதுக்கோட்டை பழைய பாலத்தை இடித்துவிட்டு அகலமான புதிய பாலம் கட்ட வேண்டும். புதிய பாலம் கட்டப்படுமானால் அந்த வழியாக புதுக்கோட்டை ஊருக்குள் வந்து அங்கிருந்து சாயர்புரம், ஸ்ரீவைகுண்டம் மற்றும் நெல்லை வழித்தடங்களுக்கு பஸ்கள் சென்று வர வசதியாக இருக்கும். அப்போதுதான் போக்குவரத்து இயல்பாகும். இதனை கருத்தில் கொண்டு புதுக்கோட்டை பழைய பாலத்தில் புதிய பாலம் கட்ட வேண்டுமென முதல்வரின் தனிப்பிரிவிற்கு கூட்டாம்புளியை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணபெருமாள் மற்றும் புதுக்கோட்டை அனைத்து வியாபாரிகள் முன்னேற்றச் சங்கத்தலைவர் பீட்டர் சார்பில் மனுக்கள் அனுப்பபட்டது.

அதன்பேரில் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சார்பில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி பாலம் கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பி உள்ளனர். ஆனால் தமிழக அரசு நிர்வாகம் இப்பணியை விரைவுபடுத்தாமல் இழுத்தடித்து வருகிறது. இதனால் புதுக்கோட்டை சுற்றுவட்டார பொதுமக்கள் போக்குவரத்து பிரச்னையை தொடர்ந்து அனுபவித்து வருகின்றனர். எனவே திட்டமிட்டும் செயல்பாட்டிற்கு வராமல் உள்ள புதுக்கோட்டை பழைய பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டும் பணியை விரைந்து செயல்படுத்த வேண்டுமென 60க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊருக்குள் வந்து செல்ல முறையான வசதியில்லை
புதுக்கோட்டை ஊரை சுற்றி சுமார் 60க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. பள்ளி, கல்லூரி மாணவ- மாணவியர் மற்றும் பொதுமக்கள் என்று ஏராளமானோர் தினசரி புதுக்கோட்டைக்கு வந்து செல்கின்றனர். நெல்லை- தூத்துக்குடி இடையே இயக்கப்படும் பஸ்கள் அனைத்தும் புதுக்கோட்டை பழைய பாலம் வழியாக புதுக்கோட்டை ஊருக்குள் வந்து சென்றன. ஊருக்கு வெளியில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட பிறகு பாயிண்ட் டூ பாயிண்ட் எனப்படும் இடைநில்லா பேருந்துகள் தவிர மற்ற பேருந்துகள் அனைத்தும் புதுக்கோட்டை ஊருக்குள் வந்து சென்றன.
ஆனால் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக மேம்பாலம் கட்டி அது பயன்பாட்டிற்கு வந்த பிறகு நெல்லையில் இருந்து தூத்துக்குடி நோக்கி செல்லும் எந்த பஸ்களும் புதுக்கோட்டை ஊருக்குள் வருவதில்லை. பஸ்கள் புதுக்கோட்டை ஊருக்குள் வந்து செல்லும் வகையில் முறையான வசதிகள் செய்யப்படவில்லை.

Related Stories: