போதையில்லா சமுதாயத்தை உருவாக்குவோம்

 

முசிறி, ஜூலை 2:போதையில்லா சமுதாயத்தை உருவாக்குவோம் என்று போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவர்கள் உறுதியேற்றனர். திருச்சி மாவட்டம் முசிறியில் உலகப் போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, காவல்துறையினர் மற்றும் கல்லூரி மாணவர்கள் இணைந்து நடத்திய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் ஜூன் 26-ஆம் தேதி முதல் உலகப் போதைப்பொருள் ஒழிப்பு தின நிகழ்ச்சிகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, முசிறி கைகாட்டி பகுதியில் இருந்து முசிறி பேருந்து நிலையம் வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. முசிறி காவல்துறையினர் மற்றும் எம்.ஐ.டி. கல்லூரி இணைந்து நடத்திய இப்பேரணியில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

பேரணியில் பங்கேற்ற மாணவர்கள், போதைப்பொருள் மற்றும் மதுப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு சென்றனர். மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போதைக்கு எதிரான முழக்கங்களையும் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், \”போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்டெடுத்து, போதை இல்லா சமுதாயத்தை உருவாக்க உறுதியாக செயல்படுவோம்; நம்முடைய உறவினர்கள் மற்றும் இளைஞர்களை போதைப்பொருள் பழக்கத்தில் ஈடுபட விடமாட்டோம்\” என்று அனைவரும் திரளாக நின்று விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முசிறி இன்ஸ்பெக்டர் செல்லதுரை, சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ், எம்.ஐ.டி. கல்லூரி பேராசிரியர்கள், ஜெசிஐ அமைப்பின் தலைவர் வினோத்குமார், தினேஷ்குமார், மாணவர்கள் மற்றும் காவல்துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: