கடல் நீர் சாகச விளையாட்டு மையப்பணிகள் நிறைவு: மீனவ இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு

 

ராமநாதபுரம், ஜூலை 2: பிரப்பன்வலசை கடற்கரை பகுதியில் சர்வதேச தரத்தில் ரூ.42.90 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கடல் நீர் சாகச விளையாட்டு மையப்பணிகள் நிறைவு பெற்றதால் விரைவில் தொடங்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் 1,076 கி.மீ நீளத்திற்கு கடற்கரை அமைந்துள்ளது. அதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் அதிகப்பட்சமாக தெற்கே மன்னார் வளைகுடா, வடக்கே பாக்ஜலசந்தி என 237 கி.மீ நீளத்திற்கு இரண்டு கடல்கள் அமைந்துள்ளது. இதில் தனுஷ்கோடி, ராமேஸ்வரம் பாம்பன், பிரப்பன் வலசை ஆகிய கடற்கரை பகுதிகளில் அலைச்சறுக்கு, நீச்சல், துடுப்பு படகு, பெடல் படகு உள்ளிட்ட பல்வேறு நீர் விளையாட்டுகளுக்கு ஏற்ற இடங்களாக உள்ளன.

இதனால் கடந்த திமுக ஆட்சியில் இந்த இடங்களில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து நீர் விளையாட்டு வீரர்களுக்கு அழைப்பு விடுத்து தனியார் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் நீர் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பாக கடற்கரை பகுதியை சுத்தமாக வைத்திருத்தல், கடல்வளம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மீனவர்கள் விளையாட்டுத் திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கி மாநில மற்றும் தேசிய அளவிலான நீர்விளையாட்டுப் போட்டிகளை ராமேஸ்வரம், பாம்பன், அரியமான் ஆகிய இடங்களில் நடத்தப்பட்டன.

ராமேஸ்வரம் கடலோரப் பகுதியில் நீர் சாகச விளையாட்டு மையம் தொடங்கினால் சுற்றுலா வளர்ச்சி மேம்படும். மீனவ இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். எனவே நீர் சாகச விளையாட்டு மையத்தை தொடங்க கடந்த திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டது. அதன்படி ராமநாதபுரத்தில் இருந்து 27 கி.மீ. தூரத்தில் சாத்தக்கோன்வலசை ஊராட்சியில் 2 கி.மீ. நீளத்தில் 150 மீட்டர் அகலத்தில் மணற்பாங்கான அரியமான் கடற்கரை உள்ளது. கடலில் 50 அடி துாரம் வரை ஆழம் இருக்காது. படகு சவாரி நடக்கிறது. இதனால் குழந்தைகளுடன் பொதுமக்கள் பொழுது போக்க வருகின்றனர்.

இதனால் 2024ம் ஆண்டில் அரியமான் அருகே பிரப்பன்வலசையில் 7 ஏக்கரில் சர்வதேச ஒலிம்பிக் அகாடமி, நீர்சறுக்கு விளையாட்டு அகாடமி அமைக்க அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்தார். தொடர்ந்து ரூ.42கோடியே 90 லட்சம் நிதியையும் ஒதுக்கீடு செய்தார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் கடற்கரை மண்ணின் தன்மை, நீரோட்டத்தின் வேகம் ஆகியவற்றையும் அதன் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் இப்பகுதி பாய்மர படகு, நீர்சறுக்கு போட்டிகளுக்கு பயிற்சி அளிக்க உகந்தது என நீர் விளையாட்டு வல்லுனர்களும் அறிக்கை அளித்தனர்.

இதனையடுத்து ஒன்றிய அரசு மற்றும் வனத்துறையின் அனுமதி பெறப்பட்டு, தொடர்ந்து 2025 பிப்ரவரியில் அப்போதைய துணை முதல்வர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் வந்து இடத்தை ஆய்வு செய்து பணியை துவங்கி வைத்தார்.
பணிகள் நிறைவடையும் காலம் 18 மாதங்களாக நிர்ணயிக்கப்பட்டு கட்டுமான பணிகள், உள்கட்டமைப்பு, விளையாட்டு கட்டமைப்பு வசதி பணிகள் முழுவீச்சில் நடந்து வந்தது. இதில் நீர்சறுக்கு மையம் அதிநவீன கட்டமைப்புகளுடன் அமைக்கப்பட்டது. படகு நிறுத்தும் இடம், கட்டுப்பாட்டு மையம், ஒர்க் ஷாப், உடற்பயிற்சி கூடம், யோகா மையம், பொருட்கள் வைக்கும் அறை, தங்கும் அறை, உணவுக் கூடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது பணிகள் முழுமடைந்து விட்டதை நேற்று முன்தினம் ராமநாதபுரம் திமுக மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ ஆய்வு செய்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது: 10 ஆண்டுகளுக்கு முன் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் இடம் பெறக்கூடிய விளையாட்டுகள் சென்னை போன்ற பெரும் நகரங்களில் மட்டுமே உள்ளடக்கி இருந்தது. எம்.எல்.ஏ என்ற முறையில் நான் விடுத்த கோரிக்கையை அப்போதை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்று ராமநாதபுரம் மாவட்டத்திலும் ஒரு ஒலிம்பிக் அகாடமி அமைக்க உத்தரவிட்டு மண்டபம் அருகே பிரப்பன்வலசையில் சர்வதேச நீர்சறுக்கு விளையாட்டு அகாடமி அமைக்க கடந்த 2024ம் ஆண்டு ரூ.42 கோடியே 90 லட்சம் நிதியை தலைவர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கீடு செய்தார். தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் உள்ளது.

இளைஞர்கள் இந்த பயிற்சி மையத்தில் பயிற்சி எடுக்கும் பட்சத்தில் ஒரு சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்கப்படுவார்கள். நீர் சறுக்கு விளையாட்டு பயிற்சியில் கற்றுக்கொண்டு மீனவ இளைஞர்கள் சிறந்த பயிற்சியாளர்களாக தேர்வாகி வேலைவாய்ப்பு பெறுவார்கள். இங்கு முறையாக பயிற்சி பெற்று சர்வதேச அளவில் நடக்கக்கூடிய ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் பங்கேற்று தமிழ்நாட்டிற்கும், மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பர் என்ற நம்பிக்கை உள்ளது. தேசிய சுற்றுலா தலமான ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி கோயில் மற்றும் தனுஷ்கோடி பகுதிகளை பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அமைந்துள்ளதால் சுற்றுலா வளர்ச்சியடையும் என்றார்.

 

Related Stories: