வேலூர் மாவட்டத்தில் வரும் 4,5ம் தேதிகளில் 6 மையங்களில் ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு: 6,393 பேர் எழுதுகின்றனர்

 

வேலூர், ஜூலை 2: வேலூர் மாவட்டத்தில் வரும் 4,5ம் தேதிகளில் 6 மையங்களில் ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வை 6,393 பேர் எழுதுகின்றனர். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் 2009ம் ஆண்டு இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் கீழ் ஆசிரியர் தகுதித் தேர்வில் அனைவரும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. மேலும், டெட் தகுதிப் பெறாமல் பணியில் உள்ள ஆசிரியர்கள் 2 வருடங்களுக்குள் தகுதிப் பெற வேண்டும் என அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இடைப்பட்ட காலத்தில் டிஆர்பி-யில் பொதுவான டெட் தேர்வு நவம்பர் மாதம் நடைபெற்றது. இந்நிலையில், பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு மட்டும் டெட் தேர்வு இந்தாண்டு ஜூலை 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடத்த டிஆர்பி அறிவுறுத்தியது. இதற்காக டெட் தேர்வு எழுதவுள்ள ஆசிரியர்களுக்கு அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி வழங்கப்பட்டது.

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் டெட் தகுதி தேர்வு முதல் தாள் தேர்வை 1,856 பேர் எழுதுகின்றனர். இவர்களுக்காக வேலூர் கொசப்பேட்டை அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி, வேலப்பாடி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி, சாய்நாதபுரம் கிருஷ்ணசாமி மேல்நிலைப்பள்ளி, தொரப்பாடி வேலம்மாள் போதி கேம்பஸ், சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 6 மையங்களில் நடக்கிறது. அதேபோல் 2வது தாள் தேர்வை 4,537 பேர் எழுதுகின்றனர். இவர்களுக்காக வேலூர் கொணவட்டம் அரசு மேல் நிலைப்பள்ளி, கொசப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வேலப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தோட்டப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீபுரம் ஸ்பார்க் மெட்ரிக் பள்ளி உட்பட 16 மையங்களில் தேர்வு நடக்கிறது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு (டெட்) வரும் 4ம் மற்றும் 5ம் தேதிகளில் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணிவரை நடக்கிறது. டெட் தேர்வு 2 தாள்கள் கொண்டு நடத்தப்படும். வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 6,393 ஆசிர்கள் கலந்து கொண்டு தேர்வை எழுகின்றனர். முதல் தாளை இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்கக்கல்வி பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் நிகரான பதவியில் உள்ளவர்கள் எழுதுவார்கள். இரண்டாம் தாளை பிடி உதவியாளர்கள், நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் இதர நிகரான பதவிகளில் உள்ளவர்கள் எழுதுவார்கள். இத்தேர்வு மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு கொள்குறி வகையில் நடைபெறும். மொத்தம் 3 மணி நேரம் தேர்வு நடைபெறும். இதற்கான வினாத்தாள்கள் பலத்த பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. எந்தவித முறைகேடுகள் இன்றி நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Related Stories: