வேலூர் மாவட்டத்தில் 950 முகாம்களில் 99 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து: எம்எல்ஏக்கள், ஆர்டிஓ வழங்கினர்

 

வேலூர், ஜூன் 29: வேலூர் மாவட்டத்தில் மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பஸ் நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் என அமைக்கப்பட்ட 950 முகாம்களில் 99 ஆயிரம் குழந்தைகளுக்கு நேற்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோயிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு 1995ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தொடர்ந்து சிறப்பு முகாம்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நேற்று 28ம் தேதி வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 5 வயதிற்குட்பட்ட 99,785 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டன.

இதற்காக மாவட்டம் முழுவதும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, குடியாத்தம் மாவட்ட தலைமையிட மருத்துவமனை, வேலூர் அரசினர் பல்நோக்கு மருத்துவமனை மற்றும் தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பஸ் நிலையங்கள், பஸ் நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், தேசிய நெடுஞ்சாலைத்துறை சுங்கச்சாவடிகள், வழிபாட்டு தலங்கள் என 950 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் பொதுசுகாதாரத்துறை, கல்வித்துறை, சமூக நலத்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் தொண்டு நிறுவனங்கள், மகளிர் திட்டப்பணியாளர்கள், அங்கன்வாடி, சத்துணவு அமைப்பாளர்கள், கிராமப்புற செவிலியர்கள் உட்பட 2168 பணியாளர்களும், இப்பணிகளை மேற்பார்வையிட 130 மேற்பார்வையாளர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தேவையான சொட்டு மருந்துகள் எடுத்துச்செல்லவும், மாவட்டம் முழுவதும் பிற துறைசார்ந்த மற்றும் சுகாதாரத்துறை வாகனங்கள் பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. முகாம்கள் காலை 7 மணி தொடங்கி மாலை 5 மணி வரை நடந்தது.

வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து பணி மற்றும் வியாபாரம் நிமித்தமாக நமது மாவட்டத்தில் வந்து தங்கியுள்ள கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், மேம்பாலப்பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள், சாலை விரிவாக்க பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள், பொம்மை விற்பனையாளர்கள் மற்றும் இலங்கைவாழ் தமிழர்கள் ஆகியோரின் குழந்தைகளுக்கும் சிறப்பு முகாம்கள் மூலமாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி நடந்தது.

வேலூர் தொரப்பாடி ஜீவா நகரில் நேற்று காலை 7 மணியளவில் நடந்த நிகழ்ச்சியில் ஆர்டிஓ ெசந்தில்குமார் முன்னிலையில் எம்எல்ஏக்கள் விேனாத்கண்ணன், டாக்டர் சுதாகர் ஆகியோர் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி, இப்பணியை தொடங்கி வைத்தனர். அதேபோல் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியை அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் எம்எல்ஏக்களும், எம்பிக்களும், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகளும் தொடங்கி வைத்தனர். நேற்று நடந்த சிறப்பு முகாம்களில் போலியா சொட்டு மருந்து போட தவறிய குழந்தைகளுக்கு மற்றொரு நாள் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என்று பொது மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
படவிளக்கம்

வேலூர் தொரப்பாடி ஜீவா நகர் அங்கன்வாடி மையத்தில் எம்எல்ஏக்கள் வினோத்கண்ணன், டாக்டர் சுதாகர் ஆகியோர் குழந்தைகளுக்கு போலியோ ெசாட்டு மருந்து வழங்கினர்.

 

Related Stories: