பெரம்பலூர், ஜூலை 1: பெரம்பலூர் நகராட்சி துறைமங்கலம் பகுதியில் வாரக்கணக்கில் காவிரி குடிநீர் விநியோகிக்கப்படாத நிலையில், நேற்று வழங்கப்பட்ட குடிநீரும் கலங்கலாக இருந்தால் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம் 3 ரோடு பகுதியில் வாரக்கணக்கில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் குடிநீர் வழங்கப்படாமல், நகராட்சி குடிநீர் கிணறுகளில் இருந்து பெறப்படும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் துறைமங்கலம் 3 ரோடு பகுதியில் நேற்று(30ஆம்தேதி) விநியோகிக்கப்பட்ட குடிநீரும் கலங்கலாக வந்துள்ளது.
இதனால், ஆத்திரமடைந்த துறைமங்கலம் பகுதி பொதுமக்கள் திடீரென பெரம்பலூர்-திருச்சி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து பெரம்பலூர் நகராட்சி பொறியாளர் ரவி மற்றும் டவுன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது சுத்தமான குடிநீர், தடையின்றி விநியோகிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் சார்பாக உறுதி அளிக்கப் பட்டதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
