மன்னார்குடி, ஜூலை 1: சேமிப்பு கிடங்குகள் மற்றும் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகளை போர்கால அடிப்படையில் உடனடியாக இயக்கம் செய்யக்கோரி மன்னார்குடியில் லாரி உரிமையாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சேமிப்பு கிடங்குகள் மற்றும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் லட்சக் கணக்கான நெல் மூட்டைகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் போர்க்கால அடிப்படையில் உடனடியாக இயக்கம் செய்ய வேண்டும். டிஎன்சிஎஸ்சி அரவை மில் முகவர்கள் சொந்த லாரிகளை வைத்து தன்னிச்சையாக இயக்கம் செய்வதை அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
டீசல் விலை ஏற்றம், லாரி உதிரிபாகங்களின் விலை ஏற்றம் இவற்றைக் கருத்தில் கொண்டு டிஎன்சிஎஸ்சிக்கான லாரி வாடகையை 40 சதவீதம் அரசு உயர்த்தி வழங்க வேண்டும். மன்னார்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு நிரந்தரமாக மோட்டார் வாகன ஆய்வாளரை உடனடி யாக நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சங்க தலைவர் வைர அய்யப்பன் அறிவுறுத்தலின் பேரில் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அருகில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்க செயலாளர் மகாலட்சுமி அறிவானந்தம் தலைமை வகித்தார். பொருளாளர் நீலகண்டன், துணை தலைவர் ராதாகிருஷ்ணன், துணைச்செயலாளர் மணிகண்டன், சங்க ஆலோசகர்கள் சேரங்குளம் செந்தில்குமார், ஆர்வி ஆனந்த், சக்திவேல் ஆகியோர் பேசினர். இதில் நூற்றுக்கணக்கான லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முடிவில், கோரிக்கைகள் அடங்கிய மனுவினை வருவாய் கோட்டாச்சியர் யோகேஸ்வரனிடம் லாரி உரிமையாளர்கள் நேரில் வழங்கினர்.
