×

வேலூர் மாவட்டத்தில் முழு பயிர்கடன் தள்ளுபடி செய்யாமல் 12 சரிபார்ப்பு குழு அமைப்பதா?.. விவசாயிகள் கடும் எதிர்ப்பு

 

வேலூர், ஜூலை 1: வேலூர் மாவட்டத்தில் முழு பயிர்கடன் தள்ளுபடி செய்யாமல் தகுதியானோர் பட்டியலை சரிபார்க்க 12 குழு அமைப்பதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முழு பயிர்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். கூட்டுறவு வங்கிகளில் 2025 மே 1ம் தேதி முதல் 2026 பிப்ரவரி 28ம் தேதி வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளின் உத்தேச கடன் நிலுவை தொகையான ரூ.5,932.23 கோடியை தமிழக அரசு தள்ளுபடி செய்துள்ளது. பயிர்க்கடன் தள்ளுபடிக்கு தகுதியான விவசாயிகளின் பட்டியல் சம்பந்தப்பட்ட சங்கத்தால் தயாரிக்கப்பட்டு செயலாட்சியரின் ஒப்புதலுடன் சரக துணை பதிவாளர் மூலம் அந்தந்த மண்டல இணைபதிவாளர்களுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என கூட்டுறவு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதைதொடர்ந்து தள்ளுபடிக்கு தகுதியானோர் பட்டியல்களை முழுமையாக சரிபார்க்கும் வகையில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர், கூட்டுறவு துறை அலுவலர், கூட்டுறவு தணிக்கை துறை அலுவலர் உள்ளிட்ட மூன்று உறுப்பினர்கள் கொண்ட சரிபார்ப்பு குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் 12 சரிபார்ப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ள அனைத்து நிபந்தனைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என மண்டல இணை பதிவாளர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், சரிபார்ப்பு குழு உறுப்பினர்கள், சங்கம் வாரியாக விவசாய கடன் தள்ளுபடி பயனாளிகள் பட்டியலை, பயிர்க்கடன் அனுமதி கோப்புடன் சரி பார்த்து பட்டா, சிட்டா, கிராம அலுவலர் ஆகியவற்றுடன் ஒப்பிட்டு சரி பார்க்க வேண்டும்.

நகைக் கடனை பொறுத்த வரை கடன் மனுக்கள் முறையாக உள்ளதா?, விதிமுறைக்கு உட்பட்டு கடன் வழங்கப்பட்டுள்ளதா? என உறுதி செய்ய வேண்டும். கடன் வழங்குவதில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வழங்கிய அனைத்து நடைமுறைகளும் உரிய முறையில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளதா என்பது உள்ளிட்ட விவரங்களை சங்கங்கள் தயாரித்துள்ள கடன் தள்ளுபடி பட்டியலை கொண்டு 100 சதவீதம் முழுமையாக முழுமையாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ஆய்வு செய்யப்பட்ட பட்டியலை ஆய்வு குழு அலுவலர்களின் கையொப்பத்துடன் தொடர்புடைய சரக துணைபதிவாளரிடம் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரால் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் சரிபார்ப்பு பணியினை முடித்து அறிக்கை சமர்ப்பித்ததை உறுதி செய்ய வேண்டும். தினமும் சரிபார்ப்பு பணி குறித்த அறிக்கையினை சம்பந்தப் பட்ட துணை பதிவாளர்கள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இதைதொடர்ந்து, பயிர்க்கடன் தள்ளுபடிக்கு தகுதியான விவசாயிகள் பட்டியலை, சரிப்பார்ப்பு குழுவினர் ஆய்வு செய்யும் பணியை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையில் வேலூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் தங்களது பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தினந்தோறும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் விவசாயிகளின் கோரிக்கைகளை தமிழக அரசு கண்டுகொள்ளாமல், பயிர்க்கடன் தள்ளுபடிக்கு தகுதியானோர் பட்டியலை ஆய்வு செய்ய 12 சரிபார்ப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் பயிர்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் நிலையில், தமிழகத்தில் பயிர்கடன் தள்ளுபடியில் பரபரட்சம் காட்டுவது ஏற்க முடியாது என்று விவசாயிகள் இந்த குழுவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: முதல்வர் விஜய் தேர்தல் அறிக்கையில் அனைத்து பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தார். நாங்கள் யாரும் பயிர்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை வைக்கவில்லை. ஆனால் அவரே வாக்குறுதி அளித்துவிட்டு அவரே தற்போது தள்ளுபடி செய்ய மறுக்கிறார். மற்ற மாநிலங்களில் எல்லாம் பயிர்கடன் முழுமையாக தள்ளுபடி செய்கிறார்கள்.

ஆனால் இங்கு மட்டும் மறுக்கிறார்கள். இதனால் விவசாயிகள் போராடிவருகின்றனர். அதற்குள் தமிழக அரசு தகுதியானோர் பட்டியல் தயார் செய்ய 12 சரிபார்ப்பு குழு அமைத்து இருப்பது நியமான நடவடிக்கை இல்லை. உடனடியாக தமிழக அரசு முழுமையாக பயிர் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Tags : Vellore district ,Vellore ,
× RELATED ரூ.7.2 கோடியில் வள்ளிமலை கோயில், சமணர்...