வேலூர், ஜூலை 6: கணியம்பாடி அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் 2 சவரன் நகை, பணம் திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் அடுத்த கணியம்பாடி அருகே உள்ள பாரதி நகரை சேர்ந்தவர் அண்ணாதுரை(65). இவர் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு ஊழியர். கடந்த 2ம் தேதி அண்ணாதுரை வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் வசிக்கும் தனது மகன் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை அக்கம் பக்கத்தினர் அண்ணாதுரையின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து சென்னையில் உள்ள அண்ணாதுரையிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அண்ணாதுரை சென்னையில் இருந்து நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும், பீரோ திறக்கப்பட்டு அதில் வைத்திருந்த துணிமணிகள் சிதறி கிடந்தன. பீரோவில் வைத்திருந்த 2 சவரன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.22,000 ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் வேலூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர். மேலும், அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
