ஒடுகத்தூர், ஜூலை 3: ஒடுகத்தூர் அருகே நிலவழிப்பிரச்னையில் முதியவர் கொலை சம்பவத்தில் தந்தை, மகன் மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிந்து சிறையில் அடைத்தனர். வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கல்லுட்டை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்(62) விவசாயி. இவரது மகன் சேகர்(35). அதே கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார்(65), ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மகன் சந்தோஷ்(28). இவர்கள் இரண்டு குடும்பத்திற்கும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக விவசாய நிலங்கள் அருகருகே உள்ளது.
இந்த விவசாய நிலத்திற்கு செல்லும் வழி தொடர்பாக 2 குடும்பத்திற்கும் பல ஆண்டுகளாக பிரச்னை இருந்து வந்தது. நேற்று முன்தினம் மாலை மீண்டும் வெங்கடேசனுக்கும், செல்வகுமாருக்கும் இடையே நிலத்திற்கு செல்லும் வழி தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செல்வகுமார் மற்றும் அவரது மகன் சந்தோஷ் ஆகிய இருவரும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சேகரின் தலையில் வெட்டியுள்ளனர்.
இதனை தடுக்க வந்த வெங்கடேசனை செல்வகுமாரும், சந்தோசும் சேர்ந்து கைகள், கட்டையால் சரமாரியாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், போலீசார் செல்வகுமார், சந்தோஷ் ஆகிய இருவரையும் பிடித்து பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: வெங்கடேசனுக்கும், செல்வகுமாருக்கும் கல்லுட்டை பகுதியில் விவசாய நிலம் உள்ளது.
மேலும், வெங்கடேசனின் நிலத்திற்கு செல்ல செல்வகுமாரின் நிலத்தை ஒட்டியவாறு 3 அடியில் வழி ஒன்று உள்ளது. நிலத்திற்கு செல்லும் இந்த 3 அடி வழியும் தங்களுக்கு தான் சொந்தம் என்று செல்வகுமார் கூறி வந்துள்ளார். ஆனால், அந்த வழி தனக்கு சொந்தம் என்று வெங்கடேசனும் உரிமை கொண்டாடி உள்ளார்.
இந்த நிலையில், பிரச்னைக்குறிய நிலத்திற்கு செல்லும் வழியில் புல், பூண்டு, இலை தழைகள் முளைத்து உள்ளது. இதனை வெங்கடேசன் நேற்று முன்தினம் மாலை சுத்தம் செய்து கொண்டு இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த செல்வகுமார் அவரது மகன் சந்தோஷ் ஆகிய இருவரும் இந்த வழி எங்களுக்கு சொந்தமானது. இதை ஏன் நீ சுத்தம் செய்கிறாய் என்று கேட்டு பிரச்னை செய்துள்ளனர். இதனால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டுள்ளனர். அப்போது அங்கு வந்த வெங்கடேசனின் மகனை இரும்பு ராடால் தலையில் அடித்துள்ளனர்.
இதனை தடுக்க வந்த வெங்கடேசனை செல்வகுமார், சந்தோஷ் ஆகிய இருவரும் கொலை வெறியுடன் தாக்கி கீழே தள்ளியுள்ளனர். இந்த தாக்குதலில் நிலை குலைந்து கீழே விழுந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவ்வாறு செல்வகுமார், சந்தோஷ் கூறியதாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர். இதுகுறித்து கொலை முயற்சி, கொலை, பெண் மீது தாக்குதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் தந்தை, மகன் மீது போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவரையும் வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.
