×

காவல், தீயணைப்பு துறையினருக்கு இணையாக 25 ஆண்டுகள் பணிபுரிந்தும் சிறைத்துறையில் பதவி உயர்வு இல்லை: முதல்வருக்கு 2ம் நிலை சிறை காவலர்கள் மனு

 

வேலூர், ஜூலை 1: காவல், தீயணைப்பு துறையினருக்கு இணையாக 25 ஆண்டுகள பணிபுரிந்தும் சிறைத்துறையில் பதவி உயர்வு வழங்கப்படாமல் உள்ளது என்று முதல்வருக்கு 2ம் நிலை சிறை காவலர்கள் மனு அளித்துள்ளனர். வேலூர் மத்திய சிறையில் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், காவலர்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக சிறைத்துறையில் கடந்த 1998ம் ஆண்டு முதல் சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒரே தகுதியின் கீழ் தேர்வு செய்யப்பட்டு பணிபுரியும் 2ம் நிலை சிறை போலீசாருக்கு, போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு இணையான காலமுறை பதவி உயர்வு, ஊதிய முரண்பாடுகள் உள்ளன.

சீருடைப் பணியில் மற்ற துறைகளுக்கு இணையாக அரசாணைகள் வந்தாலும், சிறைத்துறையில் அவை முறையாக கடைப்பிடிக்கப்படவில்லை. இதனால், 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்தும் பலர் பதவி உயர்வின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2011ம் ஆண்டு, சிறைத்துறை டிஐஜியின் பரிந்துரையின்படி, காவலர்கள் பதவி உயர்வின்றி ஓய்வு பெறுவதைத் தடுக்க 2ம் நிலை போலீஸ் பணியிடங்கள் சரண்டர் செய்யப்பட்டு, கூடுதலாக முதலாம் நிலை, தலைமை போலீஸ் மற்றும் உதவி சிறை அலுவலர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

அதன்பின்னர், உதவி சிறை அலுவலர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட்டதால், கீழ்நிலை சிறை போலீசார் பதவி உயர்வு பெற முடியாத நிலை உருவாகி தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. எனவே 25 ஆண்டுகள் தேங்கிக் கிடக்கும் சிறை போலீசாரின் அனுபவத்தை மதித்து அவர்களுக்கு காலமுறை பதவி உயர்வையும் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Minister ,Vellore ,Chief Minister ,Vellore Central Jail… ,
× RELATED ரூ.7.2 கோடியில் வள்ளிமலை கோயில், சமணர்...