டாஸ்மாக் கடைகளில் சிறுவர்களுக்கு மதுபானம் விற்க தடை விதிக்க கோரிக்கை

 

தொண்டி. ஜூலை 1: தொண்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் 18 வயது நிரம்பாத சிறுவர்களுக்கு மதுபானம் விற்பதாக புகார் எழுந்துள்ளது. உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். டாஸ்மாக் மதுபான கடைகளில் விதிமுறைகளின்படி 21 வயது பூர்த்தி அடைந்தவர்களுக்கே மதுபானம் விற்பனை செய்யப்பட வேண்டும். ஆரம்ப காலங்களில் இது குறித்த அறிவிப்பு பலகை அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காணப்பட்டது. ஆனால் தற்போது பெரும்பாலான கடைகளில் அறிவிப்பு பலகை கிடையாது. மேலும் தொண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 18 வயது நிரம்பாத சிறுவர்களுக்கு மதுபானம் விற்கப்படுவதாக தொடர்ந்து புகார் வருகிறது. மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு மீனவர் சங்க மாவட்ட செயலாளர் சீனிராஜன் கூறியது, இளைய சமுதாயத்தை சீரழிக்கும் விதமாக சிறுவர்களுக்கும் பீர் உள்ளிட்ட மதுபானங்கள் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது. 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் சிலர் போதையில் இருப்பதை பார்க்க முடிகிறது. இதை தடுக்க அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் சிறுவர்களுக்கு மதுபானம் விற்பதை தடுக்க நடவடிக்கை எடுத்து உறுதி செய்ய வேண்டும் என்றார்.

Related Stories: