போடி, ஜூலை 1: போடி அருகே ராணி மங்கம்மாள் சாலையில் சரளைக்கற்கள் கொட்டப்பட்டு நீண்ட நாட்களுக்கு பின் சாலைப்பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. போடி அருகே ரெங்கநாதபுரம் கரட்டுபட்டி பிரிவிலிருந்து துவங்கும் இணைப்பு சாலை சிலமலை நுழைவாயில் வரையில் 3 கிலோ மீட்டர் தொலைவில் ராணிமங்கம்மாள் சாலை உள்ளது. இந்த ராணிமங்கம்மாள் இணைப்பு சாலை பல ஆண்டுகளாக மண் சாலையாகவும் மேடு பள்ளம் கரடு முரடாகவும் இருந்ததால் தொழிலாளர்களும் விவசாயிகளும் இப்பகுதி விவசாய நிலங்களுக்கு சென்று வருவதில் கடும் சிரமம் அடைந்து வந்தனர். இந்நிலையில் பொதுமக்கள் விவசாயிகள் ஓட்டுநர்கள் என அரசிடம் அத்தியாவசியமாக இருக்கும் இந்த 3 கிலோ மீட்டர் மண் சாலையை மேம்படுத்தும் வகையில் தார்ச்சாலையாக மாற்றி தர வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர்.
அந்த கோரிக்கை ஏற்று கடந்த 15 ஆண்டுக்கு முன்பாக திமுக ஆட்சி காலத்தில் 3 கிலோ மீட்டர் மண் சாலையை தார்ச்சாலையாக 3 மீட்டர் அளவில் அகலமாக மாற்றி போக்குவரத்திற்காக பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அதன்பிறகு அதிமுக ஆட்சிக் காலத்தில் சாலைகள் முறையாக பராமரிக்கப்படவில்லை. இதனால், சாலைகள் முழுவதும் மழைநீர் தேங்கி குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையாக மாறியது. தொடர்ந்து விவசாயிகள் தங்களின் அறுவடை செய்த விளைப்பொருட்களையும் உரம் மருந்துகளையும் கொண்டு செல்வதற்கு சிரமம் அடைந்த நிலையில், மீண்டும் இந்த சாலையை புதுப்பித்து தர வேண்டும் என்று தொடர் கோரிக்கை விடுத்தனர்.
மீண்டும் கோரிக்கையின் அடிப்படையில் மீண்டும் திமுக ஆட்சியின் நடவடிக்கையால் பொதுமக்களின் நலன் கருதி நபார்டு வங்கி மூலமாக ரூ.2.95 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் செய்ய உத்தரவிடப்பட்டது. கடந்த இரண்டரை மாதமாக 3 கிலோ மீட்டர் சாலையை சற்று விரிவாக்கம் செய்து, சாலை ஓரங்களில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள் நடந்து வந்தது. இதனையடுத்து, தார்ச்சாலை அமைப்பதற்காக சரளைக்கற்களை 3 கி.மீ தூரத்திற்கு பரத்தி வைத்துள்ளனர். அதன் பிறகு ஆட்சி மாற்றம் நிகழ்ந்து புதிய ஆட்சி பொறுபேற்றும் பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தன. சரளைக்கற்கள் மட்டும் போடப்பட்டுள்ளதால், அதில் டூவீலர்கள் செல்வது மிகவும் கடினம், நான்கு சக்கர வாகனங்களின் டயரை பதம் பார்க்கும் சம்பவங்களும் நடைபெற்றன. அதே போல், சமப்படுத்தப்படாத சாலையால் சில நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயமும் நிலவியது.
ஆனால், தார்ச்சாலை பணிகளை விரைவுபடுத்தாமல், சரளைக்கற்கள் போடப்பட்டதிலிருந்து அப்படியே கிடந்தன. இதனால், சாலையை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வந்தனர். இந்த சாலைப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இது குறித்து தினகரனில் கடந்த மே 28ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக அதிகாரிகள் பார்வையிட்டு இரு பாலப்பணிகளை விரைந்து முடித்து சரளைக்கற்கள் ரோட் ரோலர் மூலம் அழுத்தம் கொடுக்கப்பட்டது. பின்னர், கிரஸர் மணல் சேர்த்து தயார்படுத்தினர். தொடர்ந்து இரு பாலங்களும் விரைந்து முடிக்கப்பட்டு தயார்படுத்தப்பட்டுள்ளது.
ஆனாலும், நீண்ட நாட்களுக்கு பின்னர், சரளைக்கற்களை சரி செய்யும் பணி நடைபெற்றுள்ளது. ஆனால், தார்ச்சாலை அமைக்கும் பணி தாமதமாகிறது. இந்த பணிகளை விரைந்து முடித்து தார்ச்சாலை பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
