×

துவரங்குறிச்சியில் இருந்து திருச்சி செல்ல பேருந்து வராததால் பயணிகள் திடீர் மறியல்

 

துவரங்குறிச்சி, ஜூன் 30: துவரங்குறிச்சியில் இருந்து திருச்சி செல்ல ஒரு மணிநேரம் பேருந்து இல்லாததால் காத்திருந்து ஆத்திரமடைந்த பயணிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருச்சிக்கு கல்லூரிக்கு செல்லக்கூடிய மாணவர்கள், வேலைக்கு செல்லக்கூடிய பணியாளர்கள் துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில் நேற்று காலை 8 மணியில் இருந்து பஸ்சுக்காக காத்திருந்தனார். ஆனால் காலை 9 மணி வரை திருச்சி செல்ல பேருந்து வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலையில் திரண்டு திருச்சிக்கு பேருந்துவிட வேண்டும் எனக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் ஒருமணி நேரத்திற்கும் மேலாக வெயிலிலேயே காத்திருந்த எங்களுக்கு பேருந்து வராததால் எப்படி கல்லூரிக்கு செல்வது, வேலைக்கு செல்வது என்று அரசுப் பேருந்து டிக்கெட் பரிசோதிப்பவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த துவரங்குறிச்சி போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி திருச்சிக்கு செல்ல பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்தனர். இதனால் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோன்று வேலைக்கு செல்லக்கூடிய பணியாளர்கள் வெகு நேரம் துவரங்குறிச்சி பேருந்து நிலையத்திலேயே காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது.

இதனால் வேலை நாட்களில் அதிக எண்ணிக்கையிலான பேருந்துகளை விட வேண்டும் என்றும், இதேபோன்று பள்ளிக்குச் செல்லக்கூடிய மாணவர்கள் பல நேரங்களில் தாமதமாக வருவதாகவும், இதனால் பள்ளிக்குச் செல்லக்கூடிய பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பள்ளி நேரத்தில் பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags : Dhuvarankurichi ,Trichy ,
× RELATED கஞ்சா விற்றவர் கைது