×

திருச்சி மாவட்டத்தில் 9,795 ஆசிரியர்கள் தகுதிதேர்வு எழுதுகின்றனர்

 

திருச்சி, ஜூலை 3: திருச்சி மாவட்டத்தில் 9,795 ஆசிரியர்கள் சிறப்பு டெட் தேர்வு எழுதவுள்ளனர். அரசுப் பள்ளிகளில் கடந்த 2011ம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களில் 55 வயதைக் கடந்தவர்களைத் தவிர்த்து மற்ற அனைவரும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. அதன்படி தமிழகம் முழுவதும் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூலை 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

திருச்சி மாவட்டத்தில் முதல்நாளான நாளை (4ம் தேதி) 9 மையங்களில் நடைபெறும் முதல் தாள் தேர்வினை 2,794 பட்டதாரி ஆசிரியர்களும், நாளை மறுநாள் (5ம் தேதி) 25 மையங்களில் நடைபெறும் இரண்டாம் தாள் தேர்வினை 7,001 இடைநிலை ஆசிரியர்களும் என மொத்தம் 9,795 ஆசிரியர்கள் தேர்வு எழுதவுள்ளனர். இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முன்னேற்பாட்டுப் பணிகளை பள்ளிக் கல்வித் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இத்தேர்வையொட்டி 34 முதன்மை தேர்வு மைய கண்காணிப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள், தேர்வறை கண்காணிப்பாளர்கள், பறக்கும் படையினர் என 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தேர்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Tags : Trichy district ,Trichy ,
× RELATED கஞ்சா விற்றவர் கைது