குலசேகரன்பட்டினம் கடற்கரையில் முறையான பராமரிப்பின்றி ரூ.1 கோடியில் அமைக்கப்பட்ட பூங்கா : கடல் அரிப்பால் சேதமடையும் அவலம்

 

உடன்குடி, ஜூன் 30: குலசேகரன்பட்டினம் கடற்கரையில் ரூ.1 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்ட கடற்கரைப் பூங்கா முறையான பராமரிப்பின்றி தற்போது கடலில் ஏற்பட்ட அரிப்பு காரணமாக சேதமடைந்து வருகிறது. எனவே தடுப்புகளுடன் தரமான முறையில் அமைக்க வேண்டுமென பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடன்குடி யூனியனுக்குட்பட்ட குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடைபெறும் தசரா திருவிழா உலகப் பிரசித்திப் பெற்றதாகும். இத்திருவிழாவில் லட்சகணக்கான பக்தர்கள் பங்கேற்பர். மாவட்டத்தின் தென்கோடியில் உள்ள உடன்குடி பகுதியில்தான் அனல்மின் நிலையம், துறைமுகம், ராக்கெட் ஏவுதளம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. குலசேகரன்பட்டினம் அருகிலுள்ள சுற்றுலாத்தலமான மணப்பாடு சிறந்த சூட்டிங் ஸ்பாட்டாகவும் திகழ்கிறது.

இந்நிலையில் குலசேகரன்பட்டினம் கடற்கரையில் தமிழக சுற்றுலாத்துறை, பூம்புகார், மாவட்ட ஊராட்சி முகமை ஏற்பாட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1 கோடி திட்ட மதிப்பீட்டில் சிறுவர்களுக்கான பூங்கா, கார் நிறுத்துமிடம், இ-டாய்லெட் ஆகியவை அமைக்கும் பணிகள் நடந்தது. மேலும் கடற்கரைப் பகுதியை அழகுபடுத்தும் விதமாக ஏராளமான சோலார் மின் விளக்குகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கடற்கரையில் சுழலும் சிசிடிவி கேமரா உள்ளிட்டவை அமைக்கப்பட்டது. மேலும் பூங்காவினுள் சிறுவர், சிறுமியர், பெரியவர்கள் பொழுதுபோக்கிற்கென விளையாட்டு உபகணரங்கள் அமைக்கப்பட்டது. ஆனால் 5 ஆண்டுகளுக்கு முன்பே யாரும் பயன்படுத்தாமலேயே விளையாட்டு உபகரணங்கள் உடைந்த நிலையில் கிடந்தது. அப்போது இதுகுறித்து தினகரனில் படத்துடன் செய்தி வெளியானதை தொடர்ந்து சீரமைக்கப்பட்டு பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட இயற்கை மாற்றத்தின் காரணமாக இப்பகுதி கடற்கரையில் பெருமளவு அரிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக இயற்கை சீற்றத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வண்ணம் கடற்கரை ஓரங்களில் நடப்பட்ட ஏராளமான பனை மரங்கள், கடலில் அரிப்பு காரணமாக கடலில் சரிந்து விழுந்தன. ஆனாலும் இதுவரை இப்பகுதியை அரசு அதிகாரிகள் பார்வையிட்டு முறையாக ஆய்வு ஏதும் மேற்கொள்ளாமல் மெத்தனப்போக்கையே கடைபிடித்து வருகின்றனர். இதன் காரணமாக கடற்கரையை ஒட்டி ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பூங்கா, கடலில் கொஞ்சம் கொஞ்சமாக கரையத் தொடங்கி உள்ளது. கடற்கரையோரம் இருந்த சோலார் மின்விளக்குகள், அலங்கார குடில்கள், வண்ணக்கற்கள் பதிக்கப்பட்ட தரைகள், சுழலும் சிசிடிவி கேமரா என அனைத்தும் கடலில் சீற்றத்தில் சிக்கி ஆங்காங்கே சரிந்து கிடக்கிறது.

பூங்காவினுள் முறையான பராமரிப்பில்லாத காரணத்தால் விளையாட்டு உபகரணங்கள் சிதிலமடைந்த நிலையிலும், உடைந்த நிலையிலும் காணப்படுகிறது. தற்போது குற்றுயிரும், குலைஉயிருமாக காட்சியளிக்கும் குலசேகரன்பட்டினம் கடற்கரை பூங்காவை முழுமையாக சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. பணம் கொழிக்கும் பராமரிப்பு பணிகள் கடற்கரைப் பூங்கா அருகே சில ஆண்டுகளுக்கு முன்பு அறநிலையத்துறை சார்பில் பல லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கப்பட்டது. இதனை ஏராளமான பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் பயன்படுத்தி வந்த நிலையில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் எனக் கூறி லட்சகணக்கில் செலவழித்து வந்தனர். ஆனால் தற்போது முறையான பராமரிப்பின்றி பூங்காவில் உள்ள பொருட்கள், சிறுவர்களின் விளையாட்டு உபகரணங்கள் உடைந்து சிதிலமடைந்த நிலையில் உள்ளது. பராமரிப்பு எனக்கூறி பக்தர்கள், மக்களின் வரிப்பணம் தான் வீணடிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே பூங்கா சீரிய முறையில் பராமரிக்கப்படுமா? என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் எழுப்பி உள்ளனர்.

Related Stories: