மண்டபம், ஜூன் 30: மண்டபம் ரயில் நிலைய பகுதியில் ரயில் வண்டிகளில் இணைக்கப்பட்டுள்ள ரயில் பெட்டிகளுக்கு ஏற்ப நடைமேடையை நீட்டிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதாபுரம் மாவட்டம் மண்டபம் ரயில் நிலையத்தில், ராமேஸ்வரம் பகுதியிலிருந்து வெளியூர்களுக்கு தினசரி மற்றும் வாராந்திர என 10க்கும் மேற்பட்ட ரயில்கள் பயணிகளை ஏற்றி, இறக்கி விட்டு செல்கின்றன. இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் சேது விரைவு வண்டி, கன்னியாகுமரி விரைவு ரயில் வண்டி போன்ற ரயில்களில் பெட்டிகள் அதிகமாக இணைக்கப்பட்டுள்ளது.
இதனால் மண்டபம் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பயணிகள் நடந்து செல்லும் நடைமேடை முடிந்து, நடைமேடை இல்லாத பகுதிகள் வரை ரயிலின் பெட்டிகள் நிற்கின்றன இதனால் முன்பதிவு செய்யாத பெட்டிகளில் ஏறுவதற்காக பயணிகள், கரடு முரடு கல்லு போன்ற பகுதிகளில் நடந்து செல்லும் அவலநிலை உள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள், முதியோர் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே பயணிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் விதமாக நடைமேடைகளை நீட்டித்து அமைக்க ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
