தேனியில் மக்கள் குறைதீர் கூட்டம்: 403 மனுக்கள் குவிந்தன

 

ஆண்டிபட்டி, ஜூன் 30: தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார். இன்றைய கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, புதிய வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 403 மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழங்கினர்.

மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார், அவற்றைச் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உடனடியாக ஒப்படைத்தார். மேலும், பொதுமக்கள் அளித்த இந்த மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமகிருஷ்ணன், தனித்துணை ஆட்சியர் கவிதா, மாவட்ட வழங்கல் அலுவலர் நல்லையா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கமலராஜன் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

Related Stories: