புதுடெல்லி: இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்த ஆண்டிற்குள் மீண்டும் தனது நாட்டிற்கு திரும்புவதாக உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் கடந்த 2024ம் ஆண்டு நடந்த மக்கள் போராட்டத்தை தொடர்ந்து, பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா (76) இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
கடந்த 1975ம் ஆண்டு தனது தந்தை, சகோதரர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த குடும்பத்தையும் ராணுவ புரட்சியின் போது இழந்த அவர், ஏற்கனவே பலமுறை தன் மீது நடத்தப்பட்ட கையெறி குண்டு தாக்குதல்கள் மற்றும் பல்வேறு சதித்திட்டங்களிலிருந்து உயிர் தப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்நாட்டில் தாரிக் ரகுமான் தலைமையிலான பிஎன்பி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு எதிராக பல்வேறு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்த ஷேக் ஹசீனா, ‘நான் மரணத்திற்கு அஞ்சமாட்டேன்; இந்த ஆண்டிற்குள் மீண்டும் வங்கதேசத்திற்கு திரும்புவேன்’ என்று அதிரடியாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘எனது நாடு திரும்புதல் என்பது தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது அல்ல; அது அந்நாட்டு மக்களின் அரசியல் உரிமை மற்றும் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கான நீண்டகால திட்டமாகும். தற்போது வங்கதேசத்தில் ஜனநாயகம் இல்லை, பொருளாதாரம் நலிவடைந்துள்ளது, சிறுபான்மையினர் மீது தீவிரவாதம் மற்றும் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன’ என்று குற்றம் சாட்டினார்.
ஹசீனாவின் இந்த அறிவிப்பு வெறும் கண்துடைப்பு என்றும், அவர் மீதான கொலை வழக்குகளிலிருந்து தப்பிக்கவே இது போன்ற கருத்துகளை கூறி வருவதாகவும் வங்கதேச அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
