மத்திய பிரதேசத்தில் சம்பளம் கேட்ட நடிகருக்கு மிரட்டல்: தயாரிப்பாளர் தரப்பில் மவுனம்

மும்பை: திரைப்படப் படப்பிடிப்பில் சம்பளம் தராமல் மிரட்டப்பட்டதாகக் கூறிய நடிகர் பாதுகாப்பாக மும்பை வந்தடைந்தார். மத்தியப் பிரதேச மாநிலம் மைஹார் பகுதிக்கு படப்பிடிப்பிற்காக ‘லாபடா லேடிஸ்’ திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகர் சத்யேந்திர சோனி சென்றிருந்தார். அங்கு 8 நாட்கள் அவர் பணியாற்றிய நிலையில், அதற்கான ஊதியத்தை வழங்கத் தயாரிப்பாளர் தரப்பு மறுத்துவிட்டதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், ‘என்னுடைய உழைப்பிற்கான பணத்தைக் கேட்டபோது மிரட்டல் விடுத்தனர்’ என்று வேதனையுடன் கூறியிருந்தார்.

அந்த வீடியோவிற்குப் பிறகு அவர் சமூக வலைதளத்தில் எந்தப் பதிவும் வெளியிடாததால், அவருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்திருக்குமோ என்று ரசிகர்கள் அச்சமடைந்தனர். இந்நிலையில், மிரட்டலுக்கு உள்ளான சத்யேந்திர சோனி நேற்று நண்பர்கள் ஸ்ரீதர் துபே மற்றும் பங்கஜ் சர்மா ஆகியோருடன் பாதுகாப்பாக மும்பை வந்தடைந்தார். அவர் நலமுடன் வீடு திரும்பியது ரசிகர்களுக்கு நிம்மதியைத் தந்துள்ள போதிலும், அவர் கூறிய புகார்கள் குறித்து இதுவரை தயாரிப்பாளர் தரப்பிலிருந்தோ அல்லது அதிகாரப்பூர்வ அமைப்புகளிடமிருந்தோ எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

போலீசார் இந்த விவகாரத்தில் இன்னும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதையும் வெளியிடவில்லை. திரையுலகில் சம்பள பாக்கி மற்றும் மிரட்டல் புகார் தொடர்பான இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: