ஏரல், ஜூன் 29: ஏரல் காந்திசிலை பஸ் நிறுத்தத்தில் இருந்து பஸ் நிலையம் வரை நடுரோட்டில் உள்ள மின்கம்பங்களால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வாக்குறுதி அளித்து 5 மாதங்களுக்கு மேலாகியும் நிறைவேற்றாத அதிகாரிகளால் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தின் மூன்றாவது பெரிய வணிக நகரமான ஏரலுக்கு தினமும் வியாபாரம், தொழில் தொடர்பாக ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். ஏரல் காந்திசிலை பஸ்நிறுத்தம் வழியாக பஸ்நிலையம் வரை சாலையில் மாலை வேளையில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுதோடு, வாகனங்கள் அணிவகுத்து நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
பொதுமக்களின் புகாரை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஏரல் சினிமா தியேட்டரில் இருந்து காந்திசிலை பஸ்நிறுத்தம் வழியாக பஸ்நிலையம் செல்லும் ரோட்டில் இருபுறம் கடை வைத்துள்ள வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கி ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து வியாபாரிகள் தாங்களாகவே கடை முன்பு போடப்பட்டிருந்த ஆஸ்பெஸ்டாஸ் மற்றும் தகரங்களை அகற்றினர். ஒருசில கடைகளில் அகற்றப்படாத ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைதுறை, வருவாய்துறையினர் அகற்றினர். அப்போது வியாபாரிகள் திரண்டு போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்களை அகற்றினாலே இரு பஸ்கள் ஒரேநேரத்தில் செல்லும் அளவிற்கு இடம் கிடைத்துவிடும் என்றனர். இதையடுத்து அதிகாரிகள் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மின்கம்பங்கள் அகற்றப்படும் என உறுதியளித்திருந்தனர்.
ஆனால் 5 மாதம் ஆகியும் இடையூறாக உள்ள மின்கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் ஆக்கிரமிப்பு அகற்றியும் எந்தவித பிரயோஜனமும் இல்லாமல் ஒரு பஸ் வரும்போது இன்னொரு பஸ்சிற்கு இடம் விடமுடியாமல் மீண்டும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.இதனிடையே நெடுஞ்சாலைத்துறை சார்பில் வியாபாரிகளுக்கு கடை முன்பு ஆக்கிரமிப்பு செய்திருந்தால் ஒருவாரத்திற்குள் அகற்ற வேண்டும். இல்லையெனில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அந்த பொருட்கள் ஜப்தி செய்யப்பட்டு, வியாபாரிகளிடம் இருந்து இழப்பீட்டு தொகை வசூலிக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் நேற்று முன்தினம் வழங்கியுள்ளனர். இதனால் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து ஏரல் அனைத்து வியாபாரிகள் சங்கம் செயலாளர் ரவிசங்கர் கூறுகையில், ஏரல் காந்திசிலை பஸ்நிறுத்தத்தில் இருந்து பஸ்நிலையம் செல்லும் சாலையில் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை சென்னை மற்றும் வெளியூர் செல்லும் வாகனங்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் அதிகளவு வந்து செல்வதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி 5 மாதமான போதிலும், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள 10க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மரை அதிகாரிகள் இன்னும் அகற்றாததால் இந்த சாலையின் தென்பகுதியில் அதிக இடமிருந்தும் வாகனங்கள் அதில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மின் கம்பங்கள் மாற்றி அமைக்காததால் இப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி தொடர்கிறது. ஆனால் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளது போல் மீண்டும் நோட்டீஸ் வழங்கி வருகின்றனர்’ என்றார்.
