வேட்டை தடுப்பு காவலர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்களா?

 

நெல்லை, ஜூன் 29: தமிழ்நாடு வனத்துறையின் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் காடுகளின் கண்காணிப்புப் பணிகளில் முக்கியப் பங்காற்றி வரும் வேட்டை தடுப்பு காவலர்களை பணிநிரந்தரம் செய்ய அரசு முன்வேண்டும். தனியார்மயமாக்கல் காரணமாக அவர்கள் உரிய ஊதியம் இன்றி திண்டாடுகின்றனர். தமிழக வனத்துறையில் வன ஊழியர்களுக்கு இணையாக வேட்டை தடுப்பு காவலர்களும் முக்கிய பங்காற்றி வருகின்றனர். புலிகள் காப்பகங்கள், வன உயிரின சரணாலயங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையாடுபவர்களிடமிருந்து காப்பதற்கும், சட்டவிரோத மரவெட்டுகளைத் தடுக்கவும், காட்டுத் தீ தடுப்பு, வனக் கண்காணிப்பு, வன உயிரினங்களின் நடமாட்டம் குறித்து தகவல் சேகரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் வேட்டை தடுப்பு காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலும் இப்பணிகளில் அந்தந்த வனப்பகுதிகளைச் சேர்ந்த பழங்குடியினர் மற்றும் உள்ளூர் கிராம மக்கள் நியமிக்கப்படுகின்றனர். காடுகளின் நில அமைப்பு, வனவிலங்குகளின் இயல்பு, வனப்பாதைகள் உள்ளிட்டவற்றை நன்கு அறிந்திருப்பதால், இவர்களின் பணி வனத்துறைக்கு மிகுந்த பயனளிப்பதாகக் கருதப்படுகிறது.

இவர்கள் பணிகளை தனியார் நிறுவனங்கள் மூலம் அவுட் சோர்சிங் அடிப்படையில் ஒப்படைத்துள்ளனர். இதனால் பல ஆண்டுகளாக வனத்துறையுடன் இணைந்து பணியாற்றி வரும் வேட்டை தடுப்பு காவலர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகம் முழுவதும் சுமார் 700 வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ள நிலையில், அவர்களுக்கு சம்பளம் வழங்கிட ஒரு தனியார் நிறுவனத்திடம் அவுட் சோர்சிங் வழங்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் அரசிடம் ஒரு தொகையை பெற்று கொண்டு, வெறும் 12 ஆயிரத்து 500 மட்டுமே வேட்டை தடுப்பு காவலர்களுக்கு ஊதியம் வழங்கி வருகிறது. குறைந்த ஊதியம் காரணமாக பல வேட்டை தடுப்பு காவலர்கள் வாழ்க்கை நடத்த திண்டாடி வருகின்றனர்.

தனியார்மயமாக்கல் காரணமாக, சில சமயங்களில் வனப்பகுதிகளைப் பற்றிய அனுபவம் இல்லாத நபர்களையும் பணியில் அமர்த்தும் சூழலும், இதனால் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் வேட்டைத்தடுப்பு நடவடிக்கைகளின் செயல்திறன் குறையும் நிலையும் ஏற்பட்டு வருகிறது.
மேலும், பல வேட்டை தடுப்பு காவலர்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக ஊதிய அடிப்படையில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இருப்பினும், அவர்களுக்கு நிரந்தரப் பணி, ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு, பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை நலன்கள் இன்னும் வழங்கப்படவில்லை. எனவே, வேட்டை தடுப்பு காவலர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலுத்து வருகிறது. அவ்வாறு இல்லாத பட்சத்தில் வனத்துறையின் நேரடி கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து அவர்களை பணியமர்த்த வேண்டும் என்றும், நீண்டகாலமாக பணியாற்றி வரும் வேட்டை தடுப்பு காவலர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.

காடுகளையும், வனவிலங்குகளையும் பாதுகாக்கும் பணியில் முன்களத்தில் செயல்படும் வேட்டை தடுப்பு காவலர்களின் அனுபவமும் அர்ப்பணிப்பும் வனத்துறையின் மிகப்பெரிய பலமாக உள்ளது. எனவே அவர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, கூடுதல் ஊதியமும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Related Stories: