வலங்கைமான், ஜூன் 29: கடந்த திமுக ஆட்சியில் கிராம ஊராட்சிகளை அலங்கரித்த அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை தற்போதைய த.வெ.க. அரசு தொடர்ந்து செயல்படுத்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழகத்தில் திமுக அரசு கடந்த 2006ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றவுடன் மாநிலத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சுழற்சி முறையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை செயல்படுத்தியது. அதனை அடுத்து ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை முடக்கியது. இதன் காரணமாக அப்போது கிராம ஊராட்சிகளில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றும் விதமாக திட்டப்பணிகள் நடைபெறவில்லை. பின்னர் 2021ம் ஆண்டு திமுக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை செயல்படுத்தியது. ஒரு கிராமத்தின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்பதற்கு எடுத்துக்காட்டாக கடந்த திமுக ஆட்சியில் 2006-2011ம் ஆண்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கிராம ஊராட்சிகள் மக்கள்தொகை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு சுழற்சிமுறையில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பழைய குளங்கள் தூர்வாரப்பட்டு படிக்கட்டுகள் மற்றும் பக்கவாட்டு சுவர்கள் ஆகியவை அமைக்கப்பட்டது. மேலும் இவற்றில் மிகவும் முக்கியமானதாக அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் புதிதாக நூலகம் கட்டப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
அதனை அடுத்து ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தினை முடக்கியது. இந்நிலையில் திமுக ஆட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்திலுள்ள கிராம ஊராட்சிகளில் பொதுமக்களின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் கிராம ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்-II செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்-IIன் கீழ் ஊராட்சிகளில் குறைந்த பட்ச அடிப்படை நிதியாக தலா ரூ.30 இலட்சம் ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் வழங்கப்படுகிறது. மேலும், செயல்திறன் ஊக்க நிதியாக ரூ.5 இலட்சம் ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் கூடுதலா வழங்கப்படுகிறது.
திருவாரூர்மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தில் ஆலங்குடி, புளியகுடி, அன்னுக்குடி, வேலங்குடி, நார்த்தாங்குடி உள்ளிட்ட 50 கிராம ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் குக்கிராமங்கள் அதிகமாக உள்ள மேல விடையல், மாணிக்கமங்கலம், அரவூர், மணலூர், மாளிகை திடல் உத்தமதானபுரம், ஏரி வேலூர் மற்றும் 83 ரகுநாதபுரம் ஆகிய எட்டு கிராம ஊராட்சிகள் அடையாளம் காணப்பட்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2021 -22ம் நிதியாண்டில் பணிகள் மேற்கொள்ளபட்டது. இவ்ஊராட்சிகளுக்கு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியில் நீர்நிலைகளை புனரமைப்பதற்கு என 30 சதவீதமும், குக்கிராமங்களில் தெருக்கள் மற்றும் வீதிகளை அமைத்தல் மேம்படுத்த 25 சதவீதமும், சமத்துவ சுடுகாடு மற்றும் இடுகாடு என்று பரிந்துரைக்கப்பட்ட இடங்களில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்கான 10 சதவீதமும்,
பள்ளிகளில் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பொதுபயன்பாட்டு கட்டமைப்புகளை உருவாக்க 15 சதவீதமும் பசுமை மற்றும் சுத்தமான கிராமத்திற்கான 10 சதவீதமும் வாழ்வாதாரம் மற்றும் சந்தைப்படுத்தல் வசதிகளைப் ஒருங்கிணைப்பதற்கு 10 சதவீதமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 2022−23ம் நிதிஆண்டில் வலங்கைமான் ஒன்றியத்திற்கு உட்பட்ட மூலாழ்வாஞ்சேரி வேலங்குடி வீராணம் தென்குவளவேலி, வடக்குபட்டம், மருவத்தூர், புளியக்குடி, ஆலங்குடி, ஊத்துக்காடு, நார்த்தாங்குடி, மூனியூர் உள்ளிட்ட 11 கிராம ஊராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதேபோன்று 2023-24 நிதியாண்டில் சந்திரசேகரபுரம், கோவிந்தகுடி, கீழ விடையல், கொட்டையூர், மதகரம், மணக்கால், பாடகச்சேரி, பெருங்குடி, சித்தன்வாலூர், தொழுவூர், விளத்தூர், உள்ளிட்ட 11 ஊராட்சிகளிலும் பணிகள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றது. (24-25)நிதியாண்டில் ஆதிச்சமங்கலம் ஆவூர் உள்ளிட்ட 11 கிராம ஊராட்சிகளிலும் 25-26 நிதியாண்டில் ரெகுநாதபுரம் விருப்பாட்சிபுரம் உள்ளிட்ட ஒன்பது கிராம ஊராட்சிகளிலும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்றது.
வலங்கைமான் ஒன்றியத்திற்கு உட்பட்ட 50 கிராம ஊராட்சிகளில் சுழற்சி முறையில் 5 ஆண்டுகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 194 உட்கட்டமைப்பு பணிகள் 15 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து கலந்த திமுக ஆட்சியில் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட அண்ணா மறுமலர்ச்சி திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகாலம் முடக்கப்பட்ட நிலையில் மீண்டும் திமுக ஆட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் துவங்கப்பட்டது. இதன்மூலம் வலங்கைமான் ஒன்றியத்தில் உள்ள 50 கிராம ஊராட்சிகளில் சுழற்சி முறையில் ஐந்து ஆண்டுகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடங்கள் அங்கன்வாடி, அங்காடி உள்ளிட்ட 194 உட் கட்டமைப்பு பணிகள் ரூ.15 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் முடிவு பெற்றுள்ளது. அதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் தவெக அரசு கிராம ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் விதமாக கடந்த கால திமுக அரசின் முத்தான திட்டங்களில் ஒன்றான அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தினை அனைத்து கிராம ஊராட்சிகளும் வளர்ச்சி பெரும் வகையில் செயல்படுத்திட பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
