×

ஒடுகத்தூர் அருகே அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு: போலீசார் நடவடிக்கை

 

பள்ளிகொண்டா, ஜூன் 29: ஒடுகத்தூர் அருகே அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதால் 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த கீழ்கொத்துர் ஊராட்சி சின்னத்துரை கிராமத்தில் சுமார் 280 குடும்ப அட்டைதாரர்களுக்கு பகுதி நேர ரேஷன் கடையில் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில், பகுதி நேர ரேஷன் கடையில் பயோமெட்ரிக் கருவி வேலை செய்யவில்லை எனக்கூறி பின்னத்துரையில் உள்ள கடையிலேயே பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒடுகத்தூர்-அணைக்கட்டு செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற அணைக்கட்டு தாசில்தார் சுகுமார், வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி ஆகியோர் கிராம மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி பகுதி நேர ரேஷன் கடையிலேயே உடனடியாக பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்தனர். இதனையடுத்து எவ்வித அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்பட காரணமாக அமைந்ததாக கூறி மறியலில் ஈடுபட்ட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Odugathur ,Pallikonda ,Chinnathurai ,Kilkottur panchayat ,Vellore ,
× RELATED ரூ.7.2 கோடியில் வள்ளிமலை கோயில், சமணர்...