ஈரோடு : ஈரோடு எல்லப்பாளையம் குளம் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு பராமரிப்பு இல்லாததால் மக்களின் வரிப்பணம் வீணானதாக மக்களும், சமூக ஆர்வலர்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட எல்லப்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு பின்புறம் எல்லப்பாளையம் குளம் அமைந்துள்ளது.
இந்த குளம் 1.20 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளத்திற்கு மழை நீரும்,பாசன வாய்க்காலின் கசிவு நீரும் சேகரமாகும். இந்த குளத்தினால் எல்லப்பாளையம்,பெரியசேமூர், சின்னசேமூர் என சுற்று வட்டாரத்தில் 3 கி.மீ தூரம் வரை உள்ள குடியிருப்புகளின் ஆழ்துளை கிணறுகள், விவசாய நிலத்தில் உள்ள கிணறுகளின் நீர்மட்டம் உயர முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது.
இந்த குளத்திற்கு வரும் நீர்வழிப்பாதைகள் ஆக்கிரமிப்பினாலும்,போதிய நீர்வரத்து இல்லாததால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் குளம் தூர்ந்து போனது. இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் அனுமதியின்பேரில் தன்னார்வ அமைப்பு சார்பில் குளம் தூர்வாரப்பட்டது. இருப்பினும் குளத்தில் கழிவு நீர் கலப்பால் குளத்தின் தண்ணீரை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து ஈரோடு மாநகராட்சி சார்பில் அம்ரூத் திட்டத்தில் கடந்த திமுக ஆட்சியில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் குளத்தினை மேம்படுத்தி, குளம் தூர்வாரப்பட்டு ஆழப்படுத்தப்பட்டது. மேலும், இரு கரைகளிலும் பேவர் பிளாக் கற்கள் போடப்பட்டு, நடைபாதை பூங்கா அமைக்கப்பட்டது.
இந்த குளத்தை மேம்படுத்தப்பட்ட பிறகு, மாநகராட்சி நிர்வாகம் மூலம் முழுமையாக பராமரிக்கப்படாததால் புதிதாக அமைக்கப்பட்ட நடைபாதை பூங்கா செடி, கொடிகள் படர்ந்தும்,குளத்தின் தண்ணீர் பச்சை பசேல் என மாறி பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும், குளத்திற்கு வரும் நீர்வழிப்பாதையும் செடி, கொடிகள் ஆக்கிரமித்துள்ளது.
இதனால், மாநகராட்சி மூலம் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட குளம், பராமரிப்பு இல்லாததால் மக்கள் வரிப்பணம் முற்றிலும் வீணானதாக அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.
