கத்தார் ஆலை விபத்தில் பலியான நெல்லை வாலிபர்கள் 3 பேரின் உடல்கள் சொந்த ஊரில் அடக்கம்

*சோகத்தில் மூழ்கிய கிராமங்கள்

நெல்லை : கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் உயிரிழந்த நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 3 வாலிபர்களின் உடல்கள் சொந்த ஊர்களுக்கு கொண்டுவரப்பட்டு, அரசு அதிகாரிகள் அஞ்சலியுடன் கண்ணீர் மல்க அடக்கம் செய்யப்பட்டன.வளைகுடா நாடான கத்தாரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில் கடந்த 21ம் தேதி இரவு ஏற்பட்ட கோர தீ விபத்தில் 13 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவை சேர்ந்த பழவூர் அடுத்த சிதம்பரபுரம் பவித் (26), சிவகாமிபுரம் சஜித்குமார் (24), அழகியநம்பியாபுரம் சுபின் (25) ஆகிய 3 வாலிபர்கள் சிக்கி பலியாகினர். அவர்களது உயிரிழப்பால் 3 கிராமங்களும் சோகத்தில் மூழ்கியது. அரசு சார்பில் அவர்களது குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் அவர்களது உடல்களை விரைந்து சொந்த ஊருக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து நேற்று அதிகாலையில் விமானம் மூலம் 3 பேரின் உடல்களும் திருவனந்தபுரம் வந்தடைந்தன.

பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக அவர்களது சொந்த கிராமங்களுக்கு கொண்டு வரப்பட்டது. அழகியநம்பியாபுரம் சுபின் வீட்டிற்கு துணை தாசில்தார் குமார் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.

இதேபோல் சிவகாமிபுரத்தைச் சேர்ந்த சஜித்குமார் வீட்டிற்கு ராதாபுரம் தாசில்தார் வில்லுடையார், பழவூரைச் சேர்ந்த பவித் வீட்டிற்கு தாசில்தார் சுப்புலட்சுமி ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, இறுதிச் சடங்குகளில் பங்கேற்றனர். உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

இதனைத்தொடர்ந்து மூவரின் உடல்களும் முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் 3 கிராம மக்கள் உள்பட பணகுடி பகுதி சோகத்தில் மூழ்கியது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பணகுடி, பழவூர் பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: