நெல்லை ஜூன் 26: உரவிலை உயர்வும், அதை தொடர்ந்து தனியார் உரக்கடைகள் தேவையற்ற உரங்களை விவசாயிகள் தலையில் வைத்து திணிப்பதாக கூறி நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் நேற்று விவாதம் நடந்தது. நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் கலெக்டர் ஆனந்த்மோகன் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் துரை, சேரன்மகாதேவி சப்-கலெக்டர் ஆயுஸ்குப்தா, வேளாண்மை இணை இயக்குனர் பூவண்ணன், மாவட்ட வனஅலுவலர் இளங்கோ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தை தொடங்கி வைத்து கலெக்டர் பேசுகையில், ‘‘நெல்லை மாவட்டத்தில் குப்பக்குறிச்சி, நாரணம்மாள்புரம், அழகியபாண்டியபுரம், முன்னீர்பள்ளம், பாப்பாக்குடி, வடக்கு வீரவநல்லூர், அரியநாயகிபுரம், விஜயநாராயணம், இடைக்கால், சிவந்திபுரம் ஆகிய இடங்களில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 28 இடங்களில் கொள்முதல் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பிரதம மந்திரி கவுரவ தொகை மற்றும் பயிர் காப்பீட்டு தொகை பெறுவதற்கும், வருங்காலங்களில் உரங்கள் பெறுவதற்கும் விவசாயிகள் தங்களது நில உடமை ஆவணங்களை கண்டிப்பாக பதிவு செய்திட வேண்டும்’’ என்றார். தொடர்ந்து கூட்டத்தில் உர பிரச்னை, காட்டுபன்றிகள் அட்டகாசம் உள்ளிட்டவை குறித்த விவாதம் நடந்தது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க முன்னாள் மாநிலத் துணைத்தலைவர் பெரும்படையார்: நெல்லை மாவட்டத்தில் களக்காடு, அம்பாசமுத்திரம் வட்டாரங்களில் விவசாயிகள் வாழை, நெற்பயிர் போன்றவற்றை பயிர் செய்து வருகின்றனர். இப்பயிர்களை காட்டுப்பன்றிகள் அழித்து வருகின்றன. காட்டுபன்றிகளால் ஏற்படும் சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு, காட்டுப்பன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். மேலும் கார் சாகுபடிக்கு கொடுமுடியாற்றிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு கேட்டுக்கொள்கிறோம். இதன் மூலம் சுமார் 44 குளங்கள் பாசன வசதி பெறும்.
விவசாயிகள் சங்க நெல்லை மாவட்ட செயலாளர் சுடலைராஜ்: வெள்ளநீர் கால்வாயில் வெள்ளங்குளி தொடங்கி திணைபூரணி வரை 21 ஷட்டர்கள் பழுதடைந்து காணப்படுகின்றன. அவற்றை சரி செய்யவேண்டும். பாப்பாக்குடி அருகே பனையன்குறிச்சியில் நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூடைகள் திறந்தவெளியில் வைக்கப்படுகின்றன. இதனால் நெல் வீணாகி வருகின்றன. அரியநாயகிபுரத்தில் நெல் களம் அமைக்க பலமுறை அதிகாரிகளிடத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாவட்ட செயலாளர் ஆபிரகாம்: இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் (என்சிசிஎப்) மூலம் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு சுமார் 4 மாதங்கள் ஆகியும் இதுவரை அதற்கான பணம் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துவிட்டோம்.
இதுவரை பணம் வழங்கப்படவில்லை. எனவே 4 சதவீத வட்டியுடன் நெல் வழங்கிய விவசாயிகளுக்கு பணத்தை திருப்பி அளிக்க வேண்டும். செழியநல்லூர் விவசாயி காளியப்பன்: செழியநல்லூர் குளம் 46 ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை. எனவே குளத்தை தூர்வார நடவடிக்கை அவசியம். மூலைக்கரைப்பட்டி விவசாயி செல்வக்குமார்: மணிமுத்தாறு 80 அடி கால்வாய் சிதிலமடைந்து காணப்படுகிறது. பருவமழைக்கு முன்னதாக அக்கால்வாயை சீரமைத்து தரவேண்டும். தமிழாகுறிச்சி கால்வாய், வெள்ளநீர் கால்வாய்களில் கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளன. அம்மரங்களை அகற்றினால்தான் தண்ணீர் செல்லும்.
துறையூர் விவசாயி இலோசியஸ்: மாவட்டம் முழுவதும் உர தட்டுப்பாடு நிலவுகிறது. பல கூட்டுறவு சங்கங்களில் அதிகாரிகளே இல்லை. கூட்டுறவு சங்கத்தினர் சரியாக உர வினியோகம் செய்யாததால், பொதுமக்கள் தனியார் கடைகளை நாடுகின்றனர். தனியாரிடம் உரம் வாங்கும்போது ரூ.250 மதிப்பிலான யூரியா மூடைக்கு, ரூ.1200 மதிப்பிலான பொட்டாஷ் வாங்க நிர்பந்தம் செய்கின்றனர். விவசாயிகள் தங்களுக்குத் தேவையான அடி உரங்களை உதாரணமாக, டிஏபி அல்லது காம்ப்ளக்ஸ் கேட்கும்போது, அதனுடன் சேர்த்து தேவையற்ற மேலுரங்களையும் கட்டாயப்படுத்தி வாங்கச் சொல்லி வற்புறுத்துகின்றனர்.
ஏற்கனவே உரங்களின் விலை உயர்வால் விவசாயிகள் நஷ்டத்தைச் சந்தித்து வரும் வேளையில், தேவையில்லாத உரங்களை வாங்கக் கட்டாயப்படுத்துவது விவசாயிகளை மேலும் வஞ்சிக்கும் செயலாக உள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது.
