×

பேரவையில் முதல்வர் சைகை கண்ணியத்தை மீறும் செயல்: தமிமுன் அன்சாரி, வேல்முருகன் கண்டனம்

புதுச்சேரி: புதுச்சேரி வந்த மனிதநேய ஜனநாயக கட்சி தலைவரும், சிதம்பரம் எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி அளித்த பேட்டி: தூய சக்தி என்று கூறி தவெக ஆட்சிக்கு வந்து, கடந்த 40 நாட்களில் மாநிலத்தில் 130க்கும் மேற்பட்ட கொலை சம்பவங்களும், 250க்கும் மேற்பட்ட பாலியல் குற்றச் சம்பவங்களும் நடந்துள்ளது. இதற்கு முதல்வர் விஜய் அவையில் உரிய பதில் அளிக்கவில்லை. அதற்கு பதிலாக, முதல்வர் சைகை செய்தும், அப்பாவை காணோம் என்று குறிப்பிட்டதும் பேரவை வரலாற்றில் பண்பாடற்ற செயலாகவே பார்க்கப்படும்.

சட்டப்பேரவைக்குள் உறுப்பினர்கள் சைகை காட்டக் கூடாது என்று சபாநாயகர் கூறியிருந்த நிலையில், முதல்வர் சைகை காட்டியிருப்பது பேரவை கண்ணியத்தை மீறும் செயலாகும். தமிழ் ஆட்சி மொழி, தமிழை காப்போம் என்று கூறிவிட்டு, பேரவையிலேயே கதறல்ஸ் என்ற வார்த்தையை பயன்படுத்துவது சரியானதா?. சமூக வலைதளங்களில் சிறுவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை சட்டப்பேரவையில் பயன்படுத்தலாமா? இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அளித்த பேட்டி: சட்டமன்றத்தில் சைகை செய்ததை தமிழக முதல்வர் விஜய் தவிர்த்து இருக்க வேண்டும். தற்போதைய சட்டமன்றத்தில், சட்டமன்ற மாண்புகள் பாதுகாக்கப்படவில்லை. கண்ணியத்துடன் சட்டமன்றத்தை நடத்த சபாநாயகர் முயற்சித்தாலும் அது நடைபெறவில்லை.

திரையில் சைகை செய்யலாம், அவையில் கூடாது. ராமதாசும், அன்புமணியும் சந்தித்துக் கொண்டது மகிழ்ச்சிக்குரிய செய்தி. சமூக நீதி பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் பாமக ஒருங்கிணைய வேண்டும். ஒரு குடையின் கீழ் இருக்க வேண்டும். இரு தலைவர்களும் இணைய வேண்டும் என்ற எனது விருப்பம் நிறைவேறியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Tamimun Ansari ,Velmurugan ,Puducherry ,Humanist Democratic Party ,Chidambaram MLA ,Daveka ,
× RELATED மத்திய கிழக்கு நெருக்கடி காரணமாக...