புதுடெல்லி: திருத்தப்பட்ட தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மன்றத்தின் (என்சிஇஆர்டி) பாடத்திட்டத்தின் கீழ், புதிதாக வெளியிடப்பட்ட ‘சமூகத்தைப் புரிந்துகொள்ளுதல்: இந்தியாவும் அதற்கு அப்பாலும்’ என்ற சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், ஜனநாயகம் குறித்த ஒரு அத்தியாயத்தின் பகுதியாக 9 ம் வகுப்பு மாணவர்கள் இனி நெருக்கடி நிலை குறித்து படிப்பார்கள்.
இந்தப் பிரிவானது, அடிப்படை உரிமைகள் ரத்து, பத்திரிகை தணிக்கை, எதிர்க்கட்சித் தலைவர்களின் மீது கைது நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக அமைப்புகள் மீது நெருக்கடி நிலை ஏற்படுத்திய தாக்கம் ஆகியவற்றை விவாதிக்கிறது.
9 ம் வகுப்பு என்சிஇஆர்டி பாடப்புத்தகத்தில் அவசரநிலை பிரகடனத்தை ஒரு பிரத்யேகப் பகுதியாக அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல் முறை. இது தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு மற்றும் தேசிய கல்விக் கொள்கை 2020 ஆகியவற்றின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் சமீபத்திய பாடப்புத்தகத் திருத்தங்களின் ஒரு பகுதியாகும்.
